(1)
பெரும் எண்ணிக்கையில் தன் ஆண்மக்களை குருஷேத்திரம் அனுப்பி பலியிட்ட பின் எஞ்சிய தொல்குடி மக்களும் வெளியேற பாரத வர்ஷமெங்குமிருந்தும் நான்கு திசைகளிலும் தொலை நிலங்களிலிருந்து புதிய மக்களால் தன்னை நிரப்பிக்கொள்கிறது அஸ்தினபுரி. அவர்களால் தன்னை மீள கட்டமைத்துக்கொண்டு புதிய யுகத்தில் நிலைகொள்கிறது. உடன்பிறந்தார் நால்வரும் திசைவென்று மீள அசுவமேதயாகமும் யுதிஷ்டிரர் மணிமுடிதரிக்க ராஜசூயமும் நிறைவேறுகின்றன. குருஷேத்திரப் போரின் ஈடுபடும் இருதரப்பும் அஸ்தினபுரியின் மீது பெருமதிப்பு கொண்டவை. புதிதென அஸ்தினபுரியை நிறைக்கும் மக்களும் அதன்மீது காதல் கொண்டவர்கள். சிலருக்கு அது ஊழ்க சொல் அல்லது இறையாணை பிறருக்கு வாழ்வளிக்கும் நிலம் அவர்களது எதிர்காலத்தின் இனிய கனவுகளை விளைத்துக்கொள்ள வாய்த்த வரம். பழைமையின் தளைகளில் நூற்றாண்டுகளென சிக்குண்டவர்களுக்கு உலகியல் உயர்வின் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு விடுதலையும் புதுவாழ்வும் வழங்குமிடம்.
அஸ்தினபுரி தன் வண்ணத்தை, வாழ்க்கை முறையை
மாற்றிக்கொள்கிறது. அது இளைய யாதவரின் புதிய
வேதம் கொண்டு தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.
பாபிலோனும் ஜெருசலேமும் போன்றவை அல்ல அஸ்தினபுரியும் இந்திரபிரஸ்தமும். இந்திரன் சற்று ஜெகோவா எனினும் முற்றிலும் ஜெகோவா
அல்ல. கலிதேவன் சற்று லூசிபர் போல என கருத
நேர்ந்தாலும் முற்றிலும் அவனல்ல. கலிதேவன்
அறத்தினை மறுப்பவனோ வெறுப்பவனோ அல்ல மாறாக மனிதரின் அறப்பிழைகளைக் கொண்டு அவர்களை வைத்து
விளையாடுபவன். நீர்கோலத்தில் நளன் கதையிலேயே
அவனது அறம் தெரிவிக்கப்பட்டுவிடுகிறது. ஆனால்
இளைய யாதவர் மொத்தமாக எதிர்காலத்திற்கு இந்த இருவரையும் நிராகரித்துவிடுகிறார். கலிதேவனையும் கூட ஏமாற்றி விடுகிறார் என்றுதான்
தோன்றுகிறது. ஏசு இறையென எழுந்தபின்னும் ஜெகோவா
இன்றும்தன் இடத்தில் உறுதியாகவே நிற்கிறார்.
இளைய யாதவர் இறையென எழுந்தபின் இன்று இந்திரன் கைவிடப்பட்டவராகிவிட்டார். ஒப்புநோக்க இளைய யாதவருக்கு இப்பெருநிலத்தில் வாய்த்த
சூழலைவிட ஏசுவுக்கு வாய்த்த சிறுநிலப்பரப்பின் சூழல் கடினமானது அல்ல. அரசியல்வாதியாக அரசியலை எதிர்கொண்டு மெய்மையில்
நிலைகொண்டவராக அதை அதன் தளத்தில் நிறுவ இளைய யாதவரால் இயன்றது. ஏசு அரசியல் அற்றவராக, முழுமையாக தனது மெய்மையை
முன்வைக்க இயலாமல், மெய்யியல் மட்டுமே கொண்டு அரசியலை எதிர்கொண்டார். விளைவாக பின்னாளில் அவரது மெய்மையும் கூட அரசியலால்
விழுங்கப்பட்டுவிட்டது. ஏசுவின் மெய்யியல்
அங்கு வென்றிருந்தால் உலகிற்கு எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. மெய்மையற்ற வறட்டுக் கடவுளும் வறட்டு மதக்கொள்கைகள்
பலவும் தவிர்க்கப்பட்டிருக்கும். வைதிக-அவைதிகம்
சார்ந்த மெய்மையின் வழிகளில் அமையாத அனைத்தையும் (அவற்றின் கடவுள்களையும்) இளைய யாதவர்
மதிப்பிழக்கச்செய்துவிட்டார். யோகத்தின் மெய்மையின்
வழிகளை, அவற்றிற்கு ஏற்புடைய கடவுளரை நிறுத்தி எதிர்காலத்தில் உருவாக்கிக்கொள்ள கூடிய
புதிய கடவுளரையும் அவ்வாறே இணைத்துக்கொள்ளும் அல்லது ரத்து செய்துகொள்ளும் ஒரு வரைவுத்திட்டத்தைத்
தந்துவிட்டார். இவ்வுலகிலும் அவ்வுலகிலும்
உலகியல் நோக்கில் மட்டுமே கடவுள் தேவையில்லை மெய்மைக்கென கொள்பவற்றையே உலகியலுக்கும்
கடவுள் என கொள்க என அமைத்துவிட்டார் என்று கருதுகிறேன்.
எத்தனை சிறப்பானது அஸ்தினபுரி என்றாலும்
பாபிலோனைப்போல முற்றொழிக்கப்பட எண்ண வேண்டியது இல்லை அதையும் விஞ்சியதாக கனவு நகரங்களை இங்கு எவரும் அமைத்துக்கொள்ள முடியும்
இந்திரபிரஸ்தமும் துவாரகையும் எழமுடியும் பின்னெழும் மற்றொன்று இவற்றை விஞ்சமுடியும்
ஜெருசலேமைப் போல கடவுளால் தான் நிறைவேற்றித்தரப்பட முடியும் என்று எதுவுமில்லை.
செல்வச்செழிப்பு பொருளியல் மேன்மை இவற்றால்,
உலகியலால் மட்டுமே முற்றாக தீர்மானிக்கப்படுவதாக இல்லை இப்பெருவெளியின் மக்களின் வாழ்க்கை. வெறும் உலகியல் நோக்கு மட்டுமென்றால் நமக்கான செல்வச்செழிப்பு
கடவுள் அருளாலோ அல்லது நமது விடாமுயற்சியாலோ ஒருவாறு நிறைவேற முடியும். மோசசின் மதமும் மார்க்சின் மதமறுப்பு பொதுமைக் கொள்கையும்
உலகியல் என்ற ஒரே தளத்தில்தான் உள்ளன. இங்கு
அப்படி தெளிவாக வகுத்துவிட முடியுமா? உலகியல் மட்டும்தான் என்று? அல்லது மெய்யியல்
மட்டும்தான் என்று? இங்கு வாழ்க்கை என்று நாம் கொண்டிருப்பவற்றில் நம்மில் ஆழ்மன படிமங்களாக
உணர்வுகளாக அமைந்து நம் தேவையென உலகில் வெளிப்பாடு கொள்பவை என்ன? உலகியல் நலன்கள் ஒருபொருட்டே
அல்ல என்னும் அளவிற்கு மறு எல்லையில் சிலரையேனும் நிற்கச் செய்துவிடும் விசை என்ன?
உலகியல் இன்பங்களைப் பொழிந்து அணைத்துவிட முடியாத சுடராக புத்தன் முதல் இன்றுவரை எது
அப்பால் என்று உறுத்துகிறது?
சார்வாகர் கூட மேற்குலகின் நாத்திகர் போலத்தான் பொருள்முதல்வாதிதான் என்று கொண்டாலும் “போல” என்றுதான் கூறமுடியுமே தவிர முற்றிலும் அவ்வாறல்லவே?. சார்வாகர் பொருள்முதல்வாதி ஆனால் முற்றிலும் உலகியல் சார்ந்தவர் அல்ல. புருஷார்த்தங்களை மறுத்து வேதங்களை மறுத்து அவற்றின் பின்னுள்ள உலகியல் நோக்கை கண்டடைந்தாலும் இவ்வுலகியல் இன்பமே புலன்களால் பெறும் இன்பமே மெய் என்று கொண்டாலும் அவற்றை நிறைவேற்றிக்கொள்ள தீவரம் கொண்டவர் அல்ல சார்வாகர். தன்னலம் அற்றவர்களாக அவர்கள் இருக்கின்றனர். ஒரு வகையில் செயலற்ற பண்டைய பொதுவுடைமை சிந்தனை கொண்டோர் போலும் என்று புரிந்துகொள்கிறேன். குருதி வாடை வீசுகிறதென்று பொன்னை வீசிவிடும் சார்வாகர் ஒருபோதும் குருதிசிந்தி மாற்றம் நிகழ்த்தக் கூடியவர்கள் அல்ல. உலகியல் என்று காணும் உலகியலுக்கு அப்பாலானவர்களாகவே அவர்கள் உள்ளனர். ஒருவகையில் உலகியலின் மீதான ஏளன நோக்கும் அவர்களிடம் உள்ளது. சார்வாகர்களை மட்டுமே இளைய யாதவர் உண்மையிலேயே எதிர்கொள்ளவில்லை என்று தோன்றுகிறது.
எனில் இங்கு வாழ்வென்பது (உலகியல் வாழ்வும் கூட) மெய்மையின் அடித்தளத்தின் மீதே அமைக்கப்பட முடியும். இளைய யாதவரின் இந்த புரிதல் இன்று வரை மெய்படிவர் அனைவரிலும் தொடர்கிறது. உலகின் பிற நிலங்கள் திகைத்து பின் மெல்ல தமதாக்கிக் கொள்ளக்கூடிய மெய்மை அது.