Tuesday, July 2, 2019

ஊழ்க சைக்கிள்

ஊழ்க சைக்கிள் ஓட்டக் கற்றுத் தந்தான்
உயிர் நண்பன் பெருமான்
சைக்கிளைப் பற்றியவாறே கூடவே ஓடி வந்தான்

எதிர்ப்பக்கம் சாய்ந்தபோது ”பெருமானே” என்று கத்தினேன்
”இருக்கிறேன்” இழுத்து சமன் செய்தான்.
அவன்பக்கம் சாய்ந்துபோது எடையைத் தாங்கி நிமிர்த்தி
”சாய்வின்றி நேர் செல்” என்றான்.

பரவசத்தின் ஒரு கணம் நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டுவிட்டேன்
பேரச்சத்தின் மறுகணம் அவன் இல்லை நான் தனித்து சென்று கொண்டிருக்கிறேன்
”பெருமானே” அலறத் தொடங்கினேன்.
”என்னை எண்ண வேண்டாம் தொடர்ந்து செல்” பின்னால் தூரத்தில் இருந்து பெருமானின் குரல்.

”இல்லை என்னால் முடியாது”

என் ஊழ்க சைக்கிள் பள்ளத்தில் சரிந்து விழத் தொடங்கியது.
பெருமானின் உறுதிமிக்க கரங்கள் என்னை தரையிறக்கியது.

”பெருமானே நீயில்லாமல்…”
இடைமறித்த பெருமான் ”நாளை முதல்…”
இடைமறித்த நான் ” நீ வராவிட்டால் நிறுத்திவிடுகிறேன் நீயில்லாமல் இது எனக்கு வேண்டியதேயில்லை.
”இல்லை உன்னுடனே வருகிறேன்.  மௌனமாக கேரியரில் அமர்ந்து.  நான் இருப்பதை மறந்துவிடு.  கூடவேதான் இருக்கிறேன் என்பதை மட்டும் வைத்துக்கொள்.

Monday, July 1, 2019

ப. சிங்காரத்தின் கடலுக்கு அப்பால்

”கடவுள் நம்பிக்கை இருக்கா?” ஜெயகாந்தனிடம் கேட்கப்படும் கேள்வி.  இசைஞானி இளையராஜா தயாரித்த ஜெயகாந்தன் ஆவணப்படம் ஒன்றில்.

”கடவுள் நம்பிக்கை இருக்கா?”

”எதையாவது நம்பித் தொலை.  எதையுமே நம்பாம இருக்கிறது தப்பு” ஜெயகாந்தனின் பதில்.  அவர் போன்ற இலக்கியவாதிக்கே உரித்தானது இந்த பதில்,  என்னளவில் இது ஆன்மிகமானது.  எதையாவது நம்பத்தான் வேண்டும்,  மனித மனதிற்கு நம்பிக்கை இன்றியமையாதது, அதன் அடிப்படையிலேயே அது தன் வாழ்கையின் அர்த்ததை கற்பித்துக் கொள்கிறது.  அது தண்ணீர் மலையானாக இருக்கலாம், அல்லாவாக, புத்தனாக, ஏசுவாக.  அல்லது பகுத்தறிவின் மீதான நம்பிக்கையாக.  தெய்வங்கள் குலஅறத்தை உவக்கின்றன என்பதாக அல்லது என் சொந்த மனசாட்சியின்படி தன்னறம் அல்லது கைக்கொண்ட கொள்கை என, தீர்மானித்துக் கொண்ட திசை என எதுவாகவும்.  மற்ற பிராணிகளைப் போலல்லாமல் மனிதனின் மனம் சிக்கலானதாக எளிதில் வரையறுத்துவிட முடியாததாக. ஒவ்வொருவருக்கும் அவருக்கே உரித்தான உலகை, வாழ்வை உருவாக்கித் தருவதாகவும் வாழ்வை துய்பவனாகவும் அதுவே நடிப்பதாகவும் இருக்கிறது.

வயிரமுத்துபிள்ளைக்கு வாழ்கை என்பது அவரது தொழில், அவரது அறமும் தெய்வமும் கூட.  அது எல்லாவற்றினும் மேலானது.  அவரை விட அது அவருக்கு மேலானது,  அவரது மகளின் விருப்பதை விட, அவரது மகனை விட.

பர்மாகாரர்களிடம் அடிவாங்கியதும் எத்தனையோ அவமானங்களையும் தொழிலின் பொருட்டு அவர் பொறுத்துக்கொண்டது காட்டப்படுகிறது.

அவரது மகன் ஜப்பானியரின் குண்டுவீச்சில் பலியான போதும் ஜப்பானியரை கொன்று பாலம் கடந்த செல்லையாவின் செயலை அவர் ரசிக்கவில்லை.  ஜப்பான்காரன் எவ்ளொ பெரிய ஆள்.  இவன் என்ன நாயக்கரா என்பதே அவரது எண்ணம்.  தொழில்தானே இவன் எல்லாவற்றினும் முக்கியமானது எனக்கொள்ள வேண்டியதுதானே இவன் கொண்டிருக்க வேண்டிய அறம்?

மரகதம் செல்லையாவின் மீது காதல் கொண்டவள்தான்.  அவளும் கூட தன் தந்தையின் முடிவு சரியானது என்ற ஏற்பு உடையவள் என்றே எனக்குத் தோன்றுகிறது.  ஆனால் ஒரு கோண வேறுபாட்டுடன்.  இத்தொழிலுக்கும் என் மகளுக்கும் இவன் லாயக்குப்பட மாட்டான் என்ற வயிரமுத்துபிள்ளையின் கோணமல்ல அவளுடையது.  தன் நல்வாழ்வு குறித்து அவள் கவலை கொள்ளவில்லை.  தானும் தொழிலும் செல்லையாவின் கால்தூசுக்கும் சமமல்ல என்பது அவள் எண்ணம், அதை அவனிடமே தெரிவிக்கவும் செய்கிறாள்.  உங்களுக்கு நான் தகுந்தவளல்ல எளியவள் என வணங்கி விலகுகிறாள்.

உண்மையில் நான் செல்லையாவின் தரப்பில்தான் நிற்கிறேன்.  தந்தைக்கும் மகளுக்கும் இருக்கும் லௌகீக விவேகம். செல்லையாவிற்கு அந்த அளவிற்கு இல்லைதான்.  இந்ந வேலையில்லாவிட்டால் இன்னொன்று என்று எண்ணுகிறான்.  வயிரமுத்துபிள்ளையின் குலஅறம் என்பது அவனுக்கு பொருட்டே அல்ல.  தன்னை தெய்வம் என்று நோக்கிய மரகத்தை அவன் தெய்வம் என்று நோக்கினானா என்று திட்டவட்டமாக சொல்லிவிட முடியாது, ஆனால் அவளது விருப்பம் எதுவாயினும் அதற்கு முழுமையாக மதிப்பளிக்கூடிய உண்மையான காதல்கொண்டவன்.

செல்லையாவிற்கும் கூட அவளை கும்பிட்டு விலகிக்கொள்ள அவள் மீதான ஒரு நோக்கு நண்பன் மாணிக்கத்தின் வாயிலாக தரப்படுகிறது.

அது கண்ணகி வகைப் பெண்.  அப்படிப்பட்ட பெண்கள் இருப்பதால்தான் தமிழ்நாட்டில் இன்றுகூட, சங்க காலத்தையும் நிகழ்காலத்தையும் மரபுச் சரடைக் காணமுடிகிறது.  அவர்கள் மரபு, பண்பாடு பழக்க வழக்கங்களின் அடிமைகள் – காவலர்கள்.”

செல்லையாவும் மரகதமும் வாழ்வில் வெவ்வேறு திசைகளில் பிரிகிறார்கள்.

நாவலின் நிலம் கடலுக்கு அப்பாலானது.  மலாய்க்கார்கள், சீனர், தமிழரை பெரும்பான்மை கொண்ட இந்தியர் வாழும் நிலம்.  வர்த்தகம் சார்ந்து அமைந்த தமிழர்களின் வாழ்க்கையை முதன்மையாக எடுத்துக்கொண்டிருகிறது இந்த நாவல் என்றபோதும்.  அய்என்ஏவில் இருந்து பிரிந்து செல்லும் தமிழர்கள் சிலருக்கு அன்புடன் உதவவும் அடைக்கலம் அளிக்கவும் முன்வரும் ரப்பர் தோட்டத் தொழிலாளித் தமிழர் பற்றி தொட்டுணர்தவும் செய்கிறது.

மலாய் மொழி பேச்சு இனிமையாதாக இருப்பதும் சீன மொழி இனிமையற்றதாக வயிரமுத்துபிள்ளைக்கு எரிச்சலூட்டுவதாகவும் இருக்கிறது.  யோசிக்க வேண்டியது என்று எண்ணுகிறேன்.

செல்லையா அழைத்ததை ஏற்று மரகதம் அவனுடன் சென்றிருந்தால் என்னவாகியிருக்கும்?.  இவ்வாறான நிகழ்வுகள் நடந்தன கடலுக்கப்பாலான மலேயாவில் வியாபாரம் செய்யச் சென்றவருள் ஒருவன் கதைநாயகன்.  வியாபாரத்திலிருந்து விலகி அவனும் அவன் நண்பர்கள் சிலரும் இந்திய விடுதலைக்காக ஜப்பானுடன் கூட்டமைத்திருக்கும் நேதாஜியின் படையில் சேர்கிறார்கள்.  ஜப்பான் வீழ்ச்சியடைய, நேதாஜியின் நிலைமை இன்னதென்று தெரியாதிருக்க, வென்றுவிட்ட பிரிட்டிஷ்காரர்களிடம் சிக்கிவிடாமல் தங்கள் பழைய தொழில்-வாழ்கைக்கு திரும்பிவிட முற்படுகிறார்கள்.  அதற்கான பயணத்தை இரு அணிகளாகப் பிரிந்து மேற்கொள்கிறார்கள்.  ஒரு அணியுடன் வடதிசை செல்கிறான் செல்லையா.  தடைசெய்யும் ஜப்பானியரைக் கொல்ல நேர்கிறது, சீனக் கொரில்லாக் குழு ஒன்றின் பாராட்டுதலையும் குறுகியகால நட்பையும் பெறுகிறார்கள்.  திரும்பும் செல்லையா தன்காதலி மரகதத்தை திருமணம் செய்ய அவளது தந்தை இடையூறு செய்ய அவன் அவளை ரகசியமாக அழைத்துச் சென்றுவிடுகிறான்.  அவர்கள் திருமணம் செய்துகொண்டு தொலைதூர ஊர் ஒன்றில் வாழ்கிறார்கள் என்று கதை முடிந்து இருந்தால் இந்த நாவல் என்ன இழந்திருக்கும்? முக்கியமான ஒன்றை இழந்திருக்கும்.  முதன்மை பாத்திரங்கள் தங்கள் விழுமியங்களில் குறைபட்டிருக்கும், அவ்வழி பின்னமடைந்து நாவல் முழுமையை இழந்திருக்ககூடும் என்று எண்ணுகிறேன்.

Monday, June 24, 2019

புனைவின் வழி


நான்கைந்து முள்மரங்களும் சில செடி-கொடிகளும் புதர்களும் என் காடாயிருந்தது.  விடுமுறை நாளின் இதமான காலையும் வெப்பமான மதியமும் அதனுள் கழிந்தது.  சிறிய அய்ந்து இதழ்கள் கொண்ட மஞ்சள் மலர்கள்.  தம்மிடத்தில் புகுந்து ஆக்கிரமித்துக் கொண்ட இந்த புதிய பிராணியை அசையாது கண்ணோக்கி விட்டு தலையாட்டிக் கொள்ளும் ஓணான்.  சில சமயம் சிறு குருவிகள் தெரியாமல் உட்புகுந்து மிரண்டு ஓடிவிடும்.  நாய்கள் அப்பகுதியில் அப்போது இல்லை.  அங்கு பாம்பு இருக்கிறது என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறேன்.  ஆனால் அன்று அது என்னை அச்சமுட்ட போதுமானதல்ல.


எப்போதும் சிறியது பெரியதாக விரிவாக்கப்படுகிறது.  பெரியது மேலும் பெரியதாக.  கற்பனை எல்லையில்லாது விரிவது.  அடிப்படை இயல்பாகவும் மாபெரும் சாத்தியமொன்றின் குறிப்புணர்த்தலாகவும் அது இருக்கிறது.

சிறுமரமாகிய நான் மிகப்பெரிதாகிறேன்.  என் கிளைகள் விண்ணில் விரிவடைந்து செல்கின்றன.  வேகக்காற்று என் கிளைகளை ஒடித்துவிட இயலாதவாறு அவை வலிமை பெற்றுவிட்டன.  இதோ நான் புவியின் திசை வரம்புகளை கடந்துவிட்டேன்.  புவியின் ஈர்ப்பு விசையின் எல்லைகள் கடந்து என் கிளைகள் விண்ணில் தவழ்ந்தாடத் தொடங்கிவிட்டன, புவி தன் கரம் நீட்டி விண்ணில் துழாவுவது போல்.  நான் பழகிய இடத்தின் காற்றும் கதிரொளியின் தேவையும் கூட இனி எனக்கில்லை.  விட்டு விடுதலையாகி விட்டேன்.

ஆனாலும் வேர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதா?

நிச்சயமாக அதிலென்ன அய்யம்? இனி நான் செல்லும் உலகங்கள் புதியவை. 

வேர்களின் தொடர்பறுந்த நீ இறந்துவிட மாட்டாயா?

அது பரவாயில்லை.  என்னிடம் விதைகள் இருக்கின்றன.  புதிய உலகில் அவை விழுந்து நான் புதிதாக எழுவேன்.  அங்கு காற்றும் வெப்பமும் வேறாக இருக்கலாம், உணவென உயிரோட்டம் என இருப்பவை வேறுபடலாம்.  நான் புத்துயிராய் அங்கிருப்பேன்.

நீ உன் விதைகளை அங்கு கொண்டு செல்கிறாய்

ஆம்.  விதைகளுக்குள் விண்வெளி இருக்கிறது என்பதும் விதைகள் விரிந்தே விண்வெளி ஆகியிருக்கிறது.  இரண்டும் உண்மை.

நடந்த பாதைகளிலேயே நடப்பது அலுப்பூட்டக் கூடியதுதான்.  ஆனால் பாதை தன்னை கணம் தோறும் புதுப்பித்துக் கொள்கிறது.  புதுப்பித்துக் கொள்வதன் கலையை நாம்தான் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ராமாயணத்துக்கு வெளியே ராமனும் பைபிளுக்கு வெளியே ஏசுவும் வரமுடியுமா? ஒரேவிதமாக மீண்டும் மீண்டும் அதையே என்றல்லாமல் அவர்களை சந்திக்க முடியுமா? முடியும் இரண்டு வழிகள் இருக்கின்றன.  கலையுணர்வும் நேர்மையும் இல்லாத ஒருவழி, ”இன்று காலை அவரை சந்தித்துப் பேசியபோது இந்த தேர்தலில் இந்த கட்சிதான் ஜெயிக்கும்” என்று சொன்னார் என்று சொல்வது போன்ற வழி.  மற்றொரு வழி கலையில் உள்ளார்ந்த அன்பிலும் உவகையிலும் உண்மை கொண்ட புனைவின் வழி.

பிறகு எல்லாம் மிகப்பெரிதாகிவிடுகிறது.  அவர்கள் எங்கும் நிகழக்கூடியவர்கள்தான்.