Monday, August 31, 2020

வெண்முரசு - களிற்றியானை நிரை

(1)

பெரும் எண்ணிக்கையில் தன் ஆண்மக்களை குருஷேத்திரம் அனுப்பி பலியிட்ட பின் எஞ்சிய தொல்குடி மக்களும் வெளியேற பாரத வர்ஷமெங்குமிருந்தும் நான்கு திசைகளிலும் தொலை நிலங்களிலிருந்து புதிய மக்களால் தன்னை நிரப்பிக்கொள்கிறது அஸ்தினபுரி.  அவர்களால் தன்னை மீள கட்டமைத்துக்கொண்டு புதிய யுகத்தில் நிலைகொள்கிறது.  உடன்பிறந்தார் நால்வரும் திசைவென்று மீள அசுவமேதயாகமும் யுதிஷ்டிரர் மணிமுடிதரிக்க  ராஜசூயமும் நிறைவேறுகின்றன.  குருஷேத்திரப் போரின் ஈடுபடும் இருதரப்பும் அஸ்தினபுரியின் மீது பெருமதிப்பு கொண்டவை.  புதிதென அஸ்தினபுரியை நிறைக்கும் மக்களும் அதன்மீது காதல் கொண்டவர்கள்.  சிலருக்கு அது ஊழ்க சொல் அல்லது இறையாணை பிறருக்கு வாழ்வளிக்கும் நிலம் அவர்களது எதிர்காலத்தின் இனிய கனவுகளை விளைத்துக்கொள்ள வாய்த்த வரம்.  பழைமையின் தளைகளில் நூற்றாண்டுகளென சிக்குண்டவர்களுக்கு உலகியல் உயர்வின் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு விடுதலையும் புதுவாழ்வும் வழங்குமிடம்.

 

அஸ்தினபுரி தன் வண்ணத்தை, வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்கிறது.  அது இளைய யாதவரின் புதிய வேதம் கொண்டு தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.  பாபிலோனும் ஜெருசலேமும் போன்றவை அல்ல அஸ்தினபுரியும் இந்திரபிரஸ்தமும்.  இந்திரன் சற்று ஜெகோவா எனினும் முற்றிலும் ஜெகோவா அல்ல.  கலிதேவன் சற்று லூசிபர் போல என கருத நேர்ந்தாலும் முற்றிலும் அவனல்ல.  கலிதேவன் அறத்தினை மறுப்பவனோ வெறுப்பவனோ அல்ல மாறாக மனிதரின் அறப்பிழைகளைக் கொண்டு அவர்களை வைத்து விளையாடுபவன்.  நீர்கோலத்தில் நளன் கதையிலேயே அவனது அறம் தெரிவிக்கப்பட்டுவிடுகிறது.  ஆனால் இளைய யாதவர் மொத்தமாக எதிர்காலத்திற்கு இந்த இருவரையும் நிராகரித்துவிடுகிறார்.  கலிதேவனையும் கூட ஏமாற்றி விடுகிறார் என்றுதான் தோன்றுகிறது.  ஏசு இறையென எழுந்தபின்னும் ஜெகோவா இன்றும்தன் இடத்தில் உறுதியாகவே நிற்கிறார்.  இளைய யாதவர் இறையென எழுந்தபின் இன்று இந்திரன் கைவிடப்பட்டவராகிவிட்டார்.  ஒப்புநோக்க இளைய யாதவருக்கு இப்பெருநிலத்தில் வாய்த்த சூழலைவிட ஏசுவுக்கு வாய்த்த சிறுநிலப்பரப்பின் சூழல் கடினமானது அல்ல.  அரசியல்வாதியாக அரசியலை எதிர்கொண்டு மெய்மையில் நிலைகொண்டவராக அதை அதன் தளத்தில் நிறுவ இளைய யாதவரால் இயன்றது.  ஏசு அரசியல் அற்றவராக, முழுமையாக தனது மெய்மையை முன்வைக்க இயலாமல், மெய்யியல் மட்டுமே கொண்டு அரசியலை எதிர்கொண்டார்.  விளைவாக பின்னாளில் அவரது மெய்மையும் கூட அரசியலால் விழுங்கப்பட்டுவிட்டது.  ஏசுவின் மெய்யியல் அங்கு வென்றிருந்தால் உலகிற்கு எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.  மெய்மையற்ற வறட்டுக் கடவுளும் வறட்டு மதக்கொள்கைகள் பலவும் தவிர்க்கப்பட்டிருக்கும்.  வைதிக-அவைதிகம் சார்ந்த மெய்மையின் வழிகளில் அமையாத அனைத்தையும் (அவற்றின் கடவுள்களையும்) இளைய யாதவர் மதிப்பிழக்கச்செய்துவிட்டார்.  யோகத்தின் மெய்மையின் வழிகளை, அவற்றிற்கு ஏற்புடைய கடவுளரை நிறுத்தி எதிர்காலத்தில் உருவாக்கிக்கொள்ள கூடிய புதிய கடவுளரையும் அவ்வாறே இணைத்துக்கொள்ளும் அல்லது ரத்து செய்துகொள்ளும் ஒரு வரைவுத்திட்டத்தைத் தந்துவிட்டார்.  இவ்வுலகிலும் அவ்வுலகிலும் உலகியல் நோக்கில் மட்டுமே கடவுள் தேவையில்லை மெய்மைக்கென கொள்பவற்றையே உலகியலுக்கும் கடவுள் என கொள்க என அமைத்துவிட்டார் என்று கருதுகிறேன்.

 

எத்தனை சிறப்பானது அஸ்தினபுரி என்றாலும் பாபிலோனைப்போல முற்றொழிக்கப்பட எண்ண வேண்டியது இல்லை அதையும் விஞ்சியதாக  கனவு நகரங்களை இங்கு எவரும் அமைத்துக்கொள்ள முடியும் இந்திரபிரஸ்தமும் துவாரகையும் எழமுடியும் பின்னெழும் மற்றொன்று இவற்றை விஞ்சமுடியும் ஜெருசலேமைப் போல கடவுளால் தான் நிறைவேற்றித்தரப்பட முடியும் என்று எதுவுமில்லை.

செல்வச்செழிப்பு பொருளியல் மேன்மை இவற்றால், உலகியலால் மட்டுமே முற்றாக தீர்மானிக்கப்படுவதாக இல்லை இப்பெருவெளியின் மக்களின் வாழ்க்கை.  வெறும் உலகியல் நோக்கு மட்டுமென்றால் நமக்கான செல்வச்செழிப்பு கடவுள் அருளாலோ அல்லது நமது விடாமுயற்சியாலோ ஒருவாறு நிறைவேற முடியும்.  மோசசின் மதமும் மார்க்சின் மதமறுப்பு பொதுமைக் கொள்கையும் உலகியல் என்ற ஒரே தளத்தில்தான் உள்ளன.  இங்கு அப்படி தெளிவாக வகுத்துவிட முடியுமா? உலகியல் மட்டும்தான் என்று? அல்லது மெய்யியல் மட்டும்தான் என்று? இங்கு வாழ்க்கை என்று நாம் கொண்டிருப்பவற்றில் நம்மில் ஆழ்மன படிமங்களாக உணர்வுகளாக அமைந்து நம் தேவையென உலகில் வெளிப்பாடு கொள்பவை என்ன? உலகியல் நலன்கள் ஒருபொருட்டே அல்ல என்னும் அளவிற்கு மறு எல்லையில் சிலரையேனும் நிற்கச் செய்துவிடும் விசை என்ன? உலகியல் இன்பங்களைப் பொழிந்து அணைத்துவிட முடியாத சுடராக புத்தன் முதல் இன்றுவரை எது அப்பால் என்று உறுத்துகிறது?

 

சார்வாகர் கூட மேற்குலகின் நாத்திகர் போலத்தான் பொருள்முதல்வாதிதான் என்று கொண்டாலும் “போல” என்றுதான் கூறமுடியுமே தவிர முற்றிலும் அவ்வாறல்லவே?.  சார்வாகர் பொருள்முதல்வாதி ஆனால் முற்றிலும் உலகியல் சார்ந்தவர் அல்ல.  புருஷார்த்தங்களை மறுத்து வேதங்களை மறுத்து அவற்றின் பின்னுள்ள உலகியல் நோக்கை கண்டடைந்தாலும் இவ்வுலகியல் இன்பமே புலன்களால் பெறும் இன்பமே மெய் என்று கொண்டாலும் அவற்றை நிறைவேற்றிக்கொள்ள தீவரம் கொண்டவர் அல்ல சார்வாகர்.  தன்னலம் அற்றவர்களாக அவர்கள் இருக்கின்றனர்.  ஒரு வகையில் செயலற்ற பண்டைய பொதுவுடைமை சிந்தனை கொண்டோர் போலும் என்று புரிந்துகொள்கிறேன்.  குருதி வாடை வீசுகிறதென்று பொன்னை வீசிவிடும் சார்வாகர் ஒருபோதும் குருதிசிந்தி மாற்றம் நிகழ்த்தக் கூடியவர்கள் அல்ல.  உலகியல் என்று காணும் உலகியலுக்கு அப்பாலானவர்களாகவே அவர்கள் உள்ளனர்.  ஒருவகையில் உலகியலின் மீதான ஏளன நோக்கும் அவர்களிடம் உள்ளது.  சார்வாகர்களை மட்டுமே இளைய யாதவர் உண்மையிலேயே எதிர்கொள்ளவில்லை என்று தோன்றுகிறது.


எனில் இங்கு வாழ்வென்பது (உலகியல் வாழ்வும் கூட) மெய்மையின் அடித்தளத்தின் மீதே அமைக்கப்பட முடியும்.  இளைய யாதவரின் இந்த புரிதல் இன்று வரை மெய்படிவர் அனைவரிலும் தொடர்கிறது.  உலகின் பிற நிலங்கள் திகைத்து பின் மெல்ல தமதாக்கிக் கொள்ளக்கூடிய மெய்மை அது.

Sunday, July 19, 2020

கம்பராமாயணமும் வெண்முரசும்


வெண்முரசை என்ன செய்வது என்ற எழுத்தாளர் சுரேஷ் ப்ரதீப்பின் கட்டுரையை வாசித்திருந்தேன்.  வெண்முரசை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம் என்ற திரு. பேராசிரியர் டி. தருமராஜ் அவர்களின் கேள்வியை முன் வைத்து தமிழ் இலக்கிய உலகம் வெண்முரசை மௌனத்துடன் (புரியாமல் அல்லது அறிந்துகொள்வது ஆபத்தானது என்ற எண்ணத்தில்) கடந்து சென்றுவிட அயோத்திதாச பண்டிதரையும் சங்க இலக்கியத்தினையும் போன்று, கலைச்செல்வ கருவூலத்திற்கு புரிந்துகொள்ளப்படாமலே சென்றுவிடக் கூடிய ஆபத்தைச் சுட்டியிருந்தார்.  அது அப்படி ஆகவிடக் கூடாது என்று வலியுறுத்தி இருந்தார்.  நிச்சயமாக அப்படி ஆகாது.  உண்மையில் அயோத்திதாச பண்டிதரும் சங்க இலக்கியமும் சுரேஷ் பிரதீப் போன்ற மற்றொரு தலைமுறை எழுத்தாளர்களின் வாயிலாகவும் தம்மை மீளநிறுத்திக் கொள்ளும் என்ற உறுதி எனக்கு உண்டு.  வெண்முரசு தன்மீதும் தன்னையொத்த இளம் எழுத்தாளர்கள் மீதும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பற்றி அவரே அக்கட்டுரையில் குறிப்பிட்ட வகையில் இத்தலைமுறையின் இலக்கிய உலகம் வெண்முரசு என்ற கலைச்செல்வத்தை அதற்குரிய இடத்தில் இயல்பாகவே நிலைபெறச்செய்யும்.  புரியாமல் கடந்துவிடும் நோய் இன்றைய இலக்கிய இளையோரிடம் இல்லை என்றே காண்கிறேன்.

எதிர்வரும் காலங்களில் கம்பராமாயணத்தைப் போல அதனினும் மிகவே இங்கு வெண்முரசு நிலைகொள்ளும் என்பது என் எண்ணம்.  இவ்விரு நூல்கள் மட்டுமல்ல இவ்விரண்டின் ஆசிரியர்களும் சிலவகைகளில் ஒன்றே போன்றவர்களாக தெரிகிறார்கள்.  இணையத்தில் கம்பராமாயணம் பற்றிய ஒரு கட்டுரை கிடைத்தது.  Kambar An Essay.  செல்வக்கேசவராய முதலியார் அவர்களால் எழுதப்பட்டது 1926 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது.  இக்கட்டுரையை வாசித்தபோது, சுவாரசியமாக, கம்பர் பற்றியும் கம்பராமாயணம் பற்றியும் அவர் எழுதியவற்றில் பெரும்பாலானவை அப்படியே வெண்முரசிற்கும் அதன் ஆசிரியர் ஜெமோவிற்கும் பொருந்துகின்றன (கம்பரின் தெளிவான வரலாறு கிடைக்கவில்லை ஜெவிற்கு அவ்வாறல்ல என்பது தவிர்த்து).  சிலவற்றை இங்கு ஒப்பீட்டிற்காக எடுத்துக்கொள்கிறேன்.

தண்டியலங்காரம் கூறும் காவியலட்சணம் வெண்முரசிற்கும் கம்பராமாயணத்திற்கும் பொதுவென்பதை கூறவேண்டியதில்லை. வெண்முரசின் யதிஷ்டிரரை விடவும் கர்ணனை விடவும் பீஷ்மரை விடவும் வேறு எவரைவிடவும் (அந்த ஒருவனைத் தவிர) தலைவன் துரியோதனன்.  எனினும், அந்த ஒருவன், வெண்முரசின் தன்னிகரில்லாத் தலைவன் இளைய யாதவனே.  அவனது எழும் வேதம், எழும் அனைவர்க்குமாம் என உலகம் தழுவும் அறம் அதைச் சுற்றியே மொத்த காவியமும் அதன் நிகழ்வுகளும் கவித்துவமும் நிலமும் அரசியலும் மெய்மையும் அமைந்ததாக உணர்கிறேன்.  ராமன் தனிமனிதனுக்கான ஒழுக்கத்தை அறத்தை வாழ்ந்துகாட்டினான் எனச் சொன்னால் இளைய யாதவன் பொதுமைக்கான மக்கள் திரள்களுக்கான இனக்குழுக்களுக்கான அறத்தை, மெய்மை வழிமுறைகளின் அங்கீகாரத்தை, விடுதலையை வகுத்துச்செல்கிறான்.  சுவையாக, ராமாயணத்தில் ராமனுக்கு எண்ண ஓட்டங்கள் உண்டு் வெண்முரசின் இளைய யாதவனுக்கு மன ஓட்டங்கள் இல்லை.  ராமனுக்கு தூய மனமும் இறைவடிவும் உண்டு ஆனால் மெய்மையின் அமைவு உணரும்படியாக இல்லை அல்லது அவன் அப்பாலானவன் என்று உணரும்படியாக இல்லை.  மண் நிகழ்ந்த விண்ணோன் என வெண்முரசு நிலை நாட்டியபோதும் என்னளவில் மனிதன் கடவுளானது இளைய யாதவர் எனக் கொள்ளவிரும்புகிறேன்.  இது அவரை ஒரேசமயத்தில் மிகவும் அணுக்கமானவராகவும் அப்பாலான புதிராகவும் உணரச்செய்கிறது.  அன்பும் ஏக்கமும் சந்தேகமும் தரும் புதிர்.

கல்வியிற் பெரியவன் கம்பன் என்ற மூதுரையைக் குறிப்பிடும் செல்வக்கேசவராய முதலியார் கம்பர் அவர் காலத்தில் வாசித்திருக்கக் கூடிய நூல்களைக் கூறி ராமாயணம் இவ்வளவு ரசிக்கத்தக்கதாக இருப்பதன் மர்மம் என்ன என்று கேட்க கம்பர் ”அதத்தில் ஓர் அகப்பை அள்ளிக்கொண்டிருக்கிறேன்” என்று கூறிய அய்தீகத்தைக் குறிப்பிடுகிறார்.  சீவகசிந்தாமணியும் திருக்குறளும் கம்பராமாயணத்தில் நிகழ்த்திய தாக்கத்தை சான்றுகளுடன் எடுத்துக்காட்டுகிறார்.  வெண்முரசில் சங்கப்பாடல்களும் திருக்குறளும் திருமுறைகளும் தம்மை நிகழ்த்திக்கொண்டவை திரண்டால் தனியே ஒரு நூலாகும்.

கம்பராமாயணத்தின் சில படலங்களை படிப்பது அதன் மகிமையை உணர்ந்துகொள்ள போதமானதல்ல ஒரு காண்டத்தையாயினும் முற்ற ஓதினாலன்றி அதன் அருமை புலப்படாது என்கிறார் செல்வக்கேசவராய முதலியார்.  வெண்முரசின் சில பகுதிகள் தனி நூல்களாக வெளிவந்தபோதும், அதன் நாவல்களில் சில அத்தியாயங்கள் தம்மளவில் முழுமைகொண்ட சிறுகதைகள் போல அமைந்திருக்கின்றன என்றபோதும், நாவல்களை ஒவ்வொன்றாக முழு அளவில் வாசிப்பதே சரியானது என்பது என் எண்ணம்.  வெண்முரசின் உலகினுள் நுழைய அகவெளியென உணர்ந்துகொள்ள அதனில் திளைக்க அதன் பெறுபயன்கொள்ள அதுவே உகந்தது.

வான்மீகி ராமாயணத்திற்கும் கம்பராமாயணத்திற்கும் உள்ள வேறுபாடு விளங்குவது போலவே மகாபாரத்தினின்று வெண்முரசு அதனினும் அதிகம் வேறுபாடுகொள்வதைக் காணமுடியும்.  கம்பராமாயணத்தில் அது கவிதையில் பண்பாட்டளவில் என்றால் வெண்முரசில் அது வரலாற்று நோக்கில், தர்க்க முரண்களைக் களைந்த இக்கால சிந்தனை முறையின் நோக்கில் என அமைகிறது.  இப்பாரதமெனும் பெருவெளியின் சமகால அரசியலை இதன் புவியியல் வகுத்தளித்த முறை கண்டு இதே புவியியலை மகாபாரத்தின் மீது போட்டுப்பார்த்து அன்றைய அரசியலை வரலாற்றை புரிந்துகொள்ளமுற்படுகிறது.  அதேசமயம் தர்க்கம் தவிர்த்த ஒரு கனவுலகாகவும் அதை வழங்கத் தவறுவதில்லை.  ஆழுள்ளத்தின் வெளியில் வெண்முரசின் வண்ணங்களால் எழும் ஓவியங்கள் எண்ணற்றவை.  இலக்கியப் பிரதியாக வெண்முரசின் முதன்மை நோக்கம் வாழ்வனுபவத்தை அளித்து இன்றுள்ளது என்றுமுள்ளது என்று நிகழ்கணத்தில் மெய்மையின் சந்நிதியில் நிறுத்துவதே என்று என்னளவில் கொள்கிறேன்.

செல்வக்கேசவராய முதலியார் கூறுகிறார்,
கம்பர் அடைகளையும் உவமைகளையும் ஒன்றின்மேலொன்றாக அடுக்கிக்கொண்டு போதலால், கருத்து மறைபட்டு கதையும் இடையீடுபட்டு மறந்துபோகின்றது என ஓர் இங்கிலீஷ் ஆசிரியர் குறைகூறுகின்றனர்.  வரைக்காட்சி-பூக்கொய்தல்-நீர்விளையாட்டு-படையெழுச்சி-யுத்தம்-கைக்கிளை-பெரும்பொழுது முதலானவற்றை வர்ணிக்கிற இடங்களில் கருத்து மறைபடுவதும் உண்மைதான்.  கம்பர், அரசரோடும் பிறரோடும் நெருங்கிப் பழகினவர், காடும் மேடும் நாடும் நகரமும் திரிந்துழன்றவர், சுக துக்கங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் அனுவபசித்தமாக அறிந்தவர்.  அதனால், எந்தக் காட்சியும் எந்த ஸந்தர்பமும் விரித்தெடுத்துரைப்பது அவர்க்குச் சற்றும் ப்ரயாஸமாகத் தோன்றுவதில்லை.  தற்குறிப்பேற்ற உண்மைகளை விளக்குவது அவருக்கு ஆயாஸமாக இருப்பதில்லை.  கல்வியின் விரிவும் கற்பனா சக்தியும் உடையவராகையால் சொல்லும் பொருளும் பருந்தும் நிழலும் போல பிணைந்து செல்கின்றன……

வெண்முரசினைப் பொறுத்தவரை கருத்து மறைபடுவதும் இல்லை கதையும் இடையீடுபடுவதில்லை.  அதன் சுவை மிகுவதென்பதை வாசகர் உணரலாம்.  அதன் நீண்ட தன்மையை அதிக பக்கங்கள் எனக் கருதுபவர்களை நாம் பேரிலக்கிய வாசகர் எனக்கொள்ளத் தேவையில்லை என்பது எண்ணம்.

கம்பசூத்திரம் என இலக்கணத்தோடு பொருந்தாத முடிபுகளும் அகராதி கொண்டும் அறியலாகாத அர்த்தப் ப்ரயோகங்களும் எனச் சில இடங்கள் கம்பராமாயணத்தில் வருவது சுட்டி அர்த்த சூட்சுமங்கள் கொண்டவையாக இவை அமைந்தபோதும் கம்பர் இதை வேண்டுமென்றே செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் ”தாம் பாடுதலுற்ற விஷயத்தில் மாத்திரம் சிந்தனை வைத்து அசுவதாட்டியாக விரைந்து அன்றன்று அறுநூறும் எழுநூறுமாக விருத்தங்களைப் பாடிச்செல்கையில் சிற்சில சந்தர்ப்பங்களில் இப்படிப்பட்ட முடிபுகளும் ப்ரயோகங்களும் தாமே அமைவனவாயின.” என்கிறார் செல்வக்கேசவராய முதலியார்.
கரவுக்காடு, ஜெயத்ரதனின் தலைமறைவு போன்று பல ஜெமோ சூத்திரங்கள் வேண்டுமென்றேவும் இயல்பாகவும் அமைக்கப்பெற்றிருப்பினும் சூத்திரங்களை விளக்கமுற்படுவது நவீன இலக்கியத்திற்கு விரோதமானது என்று கருதுகிறேன்.

கம்பரின் சித்ரகூட பர்வத வர்ணனையை குறிப்பிட்டு பெரும் பயணங்கள் செய்து நேரில் கண்டுவந்தவரால் மட்டுமே இத்தகைய வர்ணனைகளை செய்யமுடியும் என கம்பர் பெரும் பயணங்கள் செய்தவரென்று குறிப்பிடுகிறார்.  வெண்முரசின் பாரதப்பெருநிலம், பனியின் நிலங்கள் மலைமுடிகள் கங்கையின் நீர்பெருக்கு காந்தாரப் பாலை வெண்முரசென அறையும் பெருங்கடல் என இப்புவியியலில் ஆசிரியரின் உலகப்பயணங்கள் செலுத்தியிருக்கும் தாக்கத்தை அறியமுடிகிறது.  பயணங்களால் நிலத்தை வரலாற்று அறிவாலும் சமகால அரசியலின் அவதானிப்பினாலும் அன்றைய அரசியலை வாழ்வால் உலகியலை மனித உறவுகளால் தனி மனித-சமூக உளவியலை என அவதானித்து கல்வியினால்-வாசிப்பினால் பயிற்சியினால் மொழியின் வரம் பெற்று ஊழ்கமென தன்னை மெய்மையின் சந்நிதியில் முற்றளித்து பெறபட்டாலன்றி வெண்முரசு போன்ற பேரிலக்கியங்கள் எளிதில் தோன்றுவனவல்ல.

கம்பராமாயணத்தின் சந்தர்பத்துக்கு ஏற்ற சந்தம் என்பதைப் போல வெண்முரசின் நடையினையும் வாசகர்கள் அவதானிக்கலாம்.  மிகுந்த உவமைகளையும் வர்ணனைகளையும் நீண்டசொற்றொடர் கொண்டு சிலபோதும் அவை தவிர்க்கப்பட்டு சிலபோதும் செல்வதைக் காணலாம்.  ஆலாபனைகளையும் மெல்லவருடும் காற்றின் மயக்கையும் பாயும் அம்பின் விரைவையும் கூரையும் வெண்முரசினூடாக கடந்து வரலாம்.  வெண்முரசின் போர்களக்காட்சிகள் விழியில்விரிய, இசையின்போது யாழ் என அமையும் இதன் நடை படைக்கலம் என மாறுவதைக் காணலாம். 

”எழுந்த ஞாயிறு விழுவதன்முன் கவி பாடின தெழுநூறே” இரண்டே வாரங்களில் கதிர்தோன்றி மறையும் பொழுதுவரை நாளொன்றுக்கு எழுநூறு வீதமாக ராமாயணத்தை எழுதியது கம்பரின் விரைவு.  ஏழு ஆண்டுகளில் ஒருநாள் விடாமல் நாளொன்றுக்கு ஒரு அத்தியாயம் என பிரசுரிக்கப்பட்டு 26 நாவல்களாக எழுந்துள்ளது வெண்முரசு.  கம்பராமாயணத்தின் அத்தனை பெருமைகளையும் கொண்டு அதினும் மிஞ்ச நிலைகொள்ளும் வெண்முரசு கம்பராமாயணத்தின் மீது சிறுமதியாளர் சுமத்தமுற்பட்ட அதைப்போன்றே கீழ்மைகளையும் அதைப்போலவே எதிர்கடந்து வென்று நிலைகொள்ளும்.

தன் கட்டுரையின் இறுதிப்பகுதியில் கம்பர் சைவரா வைணவரா என்று குழப்பமடைகிறார் செல்வக்கேசவராய முதலியார்.  நீலத்தையும் கிராதத்தையும் காரணம்காட்டி ஜெமோவை வைணவர் எனச் சிலரும் சைவர் எனச் சிலரும் சித்தரிக்கமுற்படலாம்.  ஜெமோவே தன் குருநிலையின் மரபு சுட்டி தன்னை அத்வைதி எனக் கூறலாம்.  யார் சொன்னாலும் நம்பாதீர்கள்.  அவர் தாந்ரீகர்.  எனக்குத் தெரியும்.


Friday, July 17, 2020

கவிதை


அன்பில்
தனிமையில்
ஆணழகன் போட்டிக்கு கூட்டத்தின்முன்னல்ல

வேடம் புனைவதுண்டு

முற்றும் கவச உடையுடன் கைவாள் கொண்டு

சந்தம் கொண்டு
சண்டைக்காட்சி என
சன்னதம் என

பெண்தான்
சில சமயம் வீரப்பெண்

வேறொன்றுமில்லை


தற்செயல்களின் முன்னூற்று அறுபது பாகைகள்
திரும்பி வரும் போது இதே பாகை வேண்டாம்
பிறிதொன்று வாழ்க்கை
பிறிதொரு நிகழ்காலம்

ஒப்பிலி வள்ளல்

கதிரொளியும் முகிலும்

கருணையன்றி வேறொன்றுமில்லை

Thursday, July 16, 2020

துளிகள்


கிழக்கும் அல்ல மேற்கும் அல்ல
நிஜமுமல்ல பொய்யுமல்ல
சொல்வதற்கொன்றுள்ளது
சொல்லில்லை எனச் சொல்வது
நிழலின் இருப்பை யார் மறுக்கக்கூடும்?
நிழலினைக் கொன்று யார் வெல்லக்கூடும்?
ஒளி தன் நிழலை எவ்வாறு காணும்?
முற்றும் இருள் எதைத்தன் நிழல் எனக் கொள்ளும்?

சாளரத்தின் வெளியே பச்சை மரங்கள்
காய்ந்து தொங்கும் தென்னைமட்டை

கலைந்த கருமுகில் பொழிந்து சென்ற துளிகள்

Saturday, May 16, 2020

சில கணங்கள்


மேற்கே பொன்ஒளிர்ந்து இறங்கியது சுடர்
பறவைகள் சில இடமிருந்து வலம் சென்றன
மரங்கள் தலையசைக்க பின்
அசைவற்று தன் இருப்பை மறைத்தது காற்று
இன்னும் சில கணங்கள்
இரு சுடரே