மத்திய ஆசியாவின் வரைபடத்தை மேசையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான். அப்போது அவை தனி தேசங்கள் அல்ல என்று எண்ணுகிறேன் அவை சோவியத் ரஷ்யாவின் பகுதிகள். என் தோளைத் தோட்ட தாமு நான் தேடிக்கொண்டு இருப்பதை புரிந்துகொண்டு தன் சுட்டுவிரலை நீட்டி "இந்த இடமா இருக்கலாம்" என்றான். "இருந்தாலும் உனக்கு நான் கரெக்ட்டா தெரிஞ்சிட்டு வந்து சொல்றேன்" என்றான். கொங்குநாட்டிலிருந்து இடம் பெயர்ந்து அம்மா, இரு தங்கைகளுடன் சென்னை போரூரில் தாத்தா-பாட்டி வீட்டிற்கு நிரந்தரமாக குடிபெயர்ந்து அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்ந்து படித்துகொண்டிருந்த என் கவலை எனக்குப் புதியது நான் பிறந்திருந்த கொங்கு பிரதேசத்தின் அந்த எக்ஸ் பாளையத்தில் எதிர்கொண்டிராதது.
"அதெப்பட்ற.... நாங்க எக்ஸ் பாளையத்திலிருந்து இங்க வந்திருக்கோம்"
"அதுசரிடா..அது இப்ப....நீ வரலாறு புக்க படிக்கவே மாட்டியா? நீங்கல்லாம் ஆரியர்கள் மத்திய ஆசியால இருந்து கைபர்-போலன் கணவாய் வழியா வந்தவங்க. அதுதான் உங்க உண்மையான சொந்த ஊரு"
“கைபர்-போலன் கணவாய் இங்க இருக்கு" மேப்பில் ஒரு இடத்தில் விரல் வைத்துக் காட்டினான். என்னால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எனக்குப் பேசத் தெரியவில்லை.
"அதுக்கு என்ன இப்ப? திரும்பி அங்கயா போயிர முடியும்?"
"அதுக்கு இப்ப ஒண்ணுமில்ல. ஆனா திரும்பிப் போகமுடியும்….." என் பதட்டத்தை சற்று நிதானித்து கவனித்துக்கொண்டு முறுவலித்தான். நான் எதுவும் பேசாமல் நகர்ந்துவிட்டேன்.. வீட்டில் இரவில் இதை யோசித்துக்கொண்டிருந்தேன். அதெப்படி அங்கு போக முடியும்? இதை எப்படியாவது மறுக்கவேண்டும், ஆனால் தாமுவிற்கு நிறைய விஷயம் தெரிந்திருக்கிறது. மத்திய ஆசியா சென்றுவிடுவது என்பது அச்சமூட்டுவது. என் கவலையின் மைய காரணம் குளிர். ஒன்றிரண்டு ஆண்டுகள் முன்பு உறவினர் ஒருவர் வீட்டின் ஏதோ ஒரு நிகழ்வின் பொருட்டு டிசம்பர் மாதம் டில்லி சென்று தாங்கமுடியாத குளிரில் தவித்து இப்போதே ஊர் திரும்புவோம் என்று அம்மா அப்பாவிடம் அழுது கதறி அடம்பிடித்திருக்கிறேன். இந்த ஊரெலெல்லாம் எப்படி தலைநகரம்? எல்லா ஸ்டேட்காரனும் இருக்க ஏத்த இடம்தானே தலைநகரமாக இருப்பது நியாயம் என்று எண்ணி இருக்கிறேன். மடத்தனமான மத்திய ஆசியாவோ அதற்கும் அப்பால் உள்ளது மேலும் குளிராக இருக்கும் என்பது நினைக்கவே சகிக்கவில்லை.
காலையில் வீட்டின் பின்பக்கம் நான்கு தென்னை மரங்களின் இடையில் அமைந்த அகன்ற இடத்தில் செங்கல் அடுக்கி சுள்ளி இட்ட அடுப்பில் வெந்நீர் கொதித்துக் கொண்டிருந்தது. "வ்ரலாறு என்பது உண்மையில் நடந்ததாக இருக்கலாம் ஆனால் நான் இன்று உன்போலவே இங்கு பிறந்தவன். நீ எப்படி வ்ரலாறு படிக்கிறாயோ அப்படித்தான் நானும் படிக்கிறேன். யார் எந்த நாட்டில் பிறக்கிறார்களோ அவர்களுக்கு அதுதான் சொந்தநாடு என்பதுதான் நியாமானது" தாமுவை எதிர்கொள்ள வேண்டிய தர்க்கத்தை தயார் செய்துகொண்டிருந்தேன். அம்மா என்னைப் பார்த்து எரிச்சலுடன் "நீ இன்னும் குளிக்கலயா? ஸ்கூலுக்கு நேரமாகுதுடா" என்றாள். "ஆமாம் நேரமாகுது..." அவசரமாக குளிக்கப்போனேன். "எவ்வளவு முக்கியமான பிரிச்சினை என்பது இவர்களுக்கு என்ன தெரியும். கொஞ்சம்கூட அறிவில்லாமல் வாழ்கிறார்கள். அம்மாவுக்கும் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் இந்த வரலாறு தெரியுமா? தெரியாமல் இருக்காது....ஆனால் இந்த வரலாற்றின் விளைவுகளை யோசிக்கும் அளவிற்கு அறிவில்லை. திடீரென்று மத்திய ஆசியாவிற்கு போக வேண்டிய நேரம் வந்துவிட்டால் என்ன செய்வார்கள் ? எக்ஸ் பாளையத்தில் இருந்து வீட்டு சாமான்களையெல்லாம் வேனில் போட்டுகொண்டு அவற்றின் மீது உட்கார்ந்து சென்னைக்கு வந்து போலவா அங்கு செல்லமுடியும்?"
முதல்வகுப்பு கணக்கு. ஆசிரியர் PVR என்று அழைக்கப்பட்ட PR
வெங்கடேசன். மிடுக்கானவர். அவரது தோரணை, அச்சறுத்தும் பேச்சு,
விதவிதமான அடிமுறைகள் இவற்றுடன் நகைச்சுவையாக பேசவும் கூடியவர். "நான் போலீஸ் வேலையில
இருந்தவன். என்னோட கோபத்த கட்டுப்படுத்தத்தான்
கணக்கு வாத்தியார் வேலைக்கு மாறிட்டேன். ஆனா எனக்குள்ள இருக்கற போலீஸ் இன்னும் அப்படியேதான்
இருக்கான். அவன் எனக்குள்ள தூங்கிகிட்டு
இருக்கான். அவன எழுப்பிறாத" அவர் கூறியதையெல்லாம் மிகவும் நேர்மையுடன்
நம்பினேன். பின்னொருநாள் "அது தேவர்மகன்
டையலாக் ...தூங்குறான் எழுப்பிறாத கிளப்பிறாதான்னு எதுனா அளந்துவுட்டுக்கினு
இருப்பாரு. விஜயகாந்து ரஜனி கமலு படம்
பாத்துட்டு இதுமாறி உளறிக்கினு இருப்பாரு. இவருல்லாம் போலீஸ்னா மத்த போலீஸ்காரன்ல்லாம் தூக்குமாட்டிக்கினு
சாவ வேண்டித்தான் மானக்கேடா பூடும்" என்று மாணிக்கம் சொன்னான். அவரிடம் எவ்வளவோ கதறிக்கதறி அடிவாங்கினாலும் மாணிக்கம் அவரிடம்
உண்மையாக பயப்படவில்லை. அழுகாவிட்டால் அடி தொடர்ந்து கொண்டிருக்கும் என்பது
அவன் மட்டுமல்ல எல்லோருமே அறிந்துகொண்டுவிட்ட ஒன்று.
| |||||
No comments:
Post a Comment