"பனி
இறங்கும் புற்களின் பாதையில் தோன்றுபவளே
எழுகதிரின்
கிரணத்தை ஓர் கயிறெனப்பற்றி தாண்ட எண்ணித் தவிக்கிறேன்
திருக்கதவம்
திறப்பாய்
நின் கண்ணின்
ஒளியில் இச்சுடரும் இருளே அன்றோ
நின்
புன்முறுவல் இத்தோட்டத்து மலர்களின் தோழி அன்றோ
திருக்கதவம்
திறப்பாய்"
அந்த கேட்
திறப்பதற்கு எதிர்புறம் தெருவில் காத்திருந்தேன். "அப்படியே நான் நாய் என் நாவென்னும் கடிகாரமுள்
நடுவே ஆட தொங்கபோட்டு நடுத்தெருவில் நிக்கிறேன் .....ரெண்டு பிஸ்கட்டாவது போடு
அல்லது என் மீது கல்லெடுத்தாவது போடு" இதையும் சேர்த்துக்கோ என்றான் நாகூர். அவன் என் கவிதைகளை கவிதைகள் என்று உளமார நம்புபவன்தான். அவற்றின் ரசிகனும் கூட. ஆனால் அது கொள்கை கூறுவதாக கொள்கைப்பற்றின் வெளிப்பாடாக
ஆவேசமூட்டுவதாக அல்லது நீதியுணர்ச்சின் உருக்கம் கொண்டதாக இருக்க வேண்டும். என் காதல் அவனுக்கு எரிச்சலூட்டியது. காலத்திற்கு ஏற்ப வாழ்க்கை வழங்கும் சூழ்நிலைகளுக்கு
ஏற்ப கொள்கைகள் சில மாற்றங்கள் கொள்ளக்கூடியவை அதனால் அவை அழிந்து போகின்றன என்று
அர்த்தமல்ல அதுவேதான் இப்போது இதுவாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளாதவன்
நாகூர். என் கொள்கைகளில் சிறு மாற்றங்கள். கொந்தளிப்பான அந்த பெருவெடிப்பின் நாளில் கோயில்களை இடித்துத் தரைமட்டம் ஆக்க வேண்டிய என் சூளுரையில்,
மதவாதிகளை சாமியார்களை கேடு விளைவிக்கும் மூடர்களை சரிப்பதின் நோக்கத்தில் மாற்றம்
இல்லை. ஆனால் சிறுமாற்றம் முதலில்
இடிக்கப்பட வேண்டியது வைணவக் கோயில் என்பதை என் பத்மப்பிரியாவிற்காக சற்று
மாற்றிக்கொண்டேன். அவள் இறுதி
முறையாக தன் பெருமாளை சேவிக்க பெருந்தன்மையுடன் அனுமதிப்பேன். நாத்திகத்தின் தமிழ்நாடு மாதிரியில் ஒரு தன்மை உண்டு
சைவ குடும்பத்தில் பிறந்த என் நாத்திகம் முதலில் குறிவைப்பது வைணவத்தை என்பது
போலவே வைணவம் சார்ந்த கலைஞர்களுக்கு அல்லது சினிமா கலைஞர்களுக்கு நாத்திகம் என்பது
சைவக் கடவுளரின் மீதான கேலியில் இருந்தே தொடங்கும். அத்துடன் இந்து மதத்தை மட்டுமே காணும் முஸ்லீம்
கவிஞர்கள் அல்லது புரட்சிகர பேராயர்கள் ராமபிரானை தூற்ற விருப்பும்
சைவசிந்தாந்திகள் என பகுதிநேர நாத்திகர்களும் உண்டு என்பரால்...கும்பகர்ணனாகிய
எனக்கு கொஞ்சம் புறசூழல் பற்றி அவதானிப்பு உண்டு அத்துடன் கொஞ்சம் உள்ளுணர்வும்.
"என்
பத்மப்பிரியா நான் ராவணனின் தம்பிதான். இதுவரை நான் ராமனை வெறுத்தவன்தான் ஆனால் நீ வணங்கும் அவனை
இப்போதெல்லாம் அவ்வளவாக வெறுப்பதில்லை. உண்மையில் அந்த ராமாயண கும்பகர்ணனுக்குக் கூட ராமன்
மதிப்பிற்குரிய எதிரிதானே? ஒருவேளை நீ இல்லாது என்வாழ்வு என்றால் ...வேண்டாம் அது
ஒருபோதும் நினைக்கக்கூட முடியாது... என் காதல் தோற்கும் என்றால் உன் கடவுள்
ராமனிடம் சொல்லி அவன் அம்புகளால் என் இதயத்தை துளைத்துவிடச் சொல்...அவன் அம்புகள்
என் உடலை கடலில் எறியட்டும். என் காதலை எவராலும் அழிக்க முடியாது. அதை என் உயிரில் கரைத்து குழைத்து திரிகோணமலைச் சரிவின்
பாறைகளில் அழியா ஓவியமாக தீட்டி இருக்கிறேன். என்றேனும் ஏதேனும் ஓர் பிறப்பில் இதன் வாசம் இதன் ஒளி
அம்மரங்களில் தவழ் மென்காற்று உன்னையும் என்னையும் இணைக்கும். ஆம் அன்று நாம் இணைகையில் உனக்கும் எனக்கும்
வெறுப்பூட்டும் வேற்றுமைகள் எதுவும் இருக்காது. நான் விரும்பும் பொதுவுடைமை நல்லறம் பூண்ட சமுதாயம் நீ
விரும்பும் ராமன் இரண்டும் ஒன்றென இருக்கும். புரட்சித்தலைவனாக ராமன் எழுந்து ஒரு பெரும் பொதுவுடமை
குடியரசை நிறுவி இருப்பான். அன்று என் மாபெரும் தலைவனும் உன் அன்பிற்குரிய கடவுளும்
ஒன்றே என்றிருக்கும்."
No comments:
Post a Comment