Wednesday, June 19, 2019

ஒரு கும்பகர்ணனின் மங்கல் நினைவுகள்-8

மாணிக்கம் கை முறிந்து விடுப்பில் இருந்தான்.  அவனது குடிசைக்கு சென்றபோது கயிற்றுக் கட்டிலில் முதுகுக்கு தலையணை கொடுத்து சுவரில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்திருந்தான்.  "வா கும்பா" என்று சிரித்தான்.  அவனது இடது கை புத்தூர் கட்டுபோட்டு தொங்கவிடப்பட்டிருந்தது.  அக்குடிசையில் மண் சுவற்றால் பிரிக்கப்பட்டிருந்த சமையல் அறையில் இருந்து எட்டிப்பார்த்த அவன் அம்மா "வாப்பா" என்றாள். "பத்தாவது வரிக்கும்ன்னா படிச்சிருவான்னு நெனச்சேன்....." என்று அவள் துவங்க.  "வாய மூடிக்கினு இரு" என்று அதட்டி நிறுத்திவிட்டான் மாணிக்கம்.  "பாஸாயிறலாம் டா" என்றேன் நான்.  பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு என்பதால்  மாணவர்கள் அனைவருமே முனைப்பு காட்டினர்.  மாதவன்சார் கூட வழியில் பார்த்தால் "பத்தாவதாடா.  இனிமேனா நல்லா படிச்சி போயச்சிக்குங்க" என்று ஆசியளித்தார்.  எட்டாம் வகுப்பு வரை மட்டுமே அவரது எல்லை.  மேல்நிலை ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர்களை மதிப்பதில்லை என்ற குறை அவருக்கு உண்டு.

ஏழாம் வகுப்பு படித்தபோது நானும் மாணிக்கமும் தோட்டத்தில் மாங்காய் திருட போனோம்.  எட்டாம் வகுப்பின் போது அடுத்தகட்டத்திற்கு சென்றோம்.  தொலைதூரம் நடந்து சென்று கம்பிவேலி இடப்பட்ட காலிமனைகளுக்கு செல்வது.  மாணிக்கம் தன் டௌசர் பையில் இருந்து கட்டிங் பிளேயரை கையில் எடுப்பான்.  "வெறும் நிலத்துக்கு எதுக்குடா வேலி?" என்று ரஜினி ஸ்டைலில் சொல்லி வேலிக்கல்லை காலால் உதைப்பான்.  பிறகு வெய்யிலில் மண்டை காய உடல் முழுவதும் வேர்வை ஓட வேலை செய்வோம்.  அவன் கம்பிகளை கத்தரித்து தர நான் அதை முடித்த அளவிற்கு மடக்கி சுருட்டி கோணிப்பைக்குள் திணிப்பேன்.  மிகவும் சோர்வடைந்த பின் "இன்னக்கி இவ்வளவு போதும்" என்று முடிவு செய்து புறப்படுவோம்.  அந்த மனையின் இரண்டு பக்க வேலிக்கம்பிகள் நீங்கி இருக்கும்.

காய்லாங் கடையில் எடை பார்த்துவிட்டு "பத்து ரூபா" என்பார் கடைக்காரர்.  "ஏமாத்தாத இருபது ரூபா குடு" என்பான் மாணிக்கம்.  "ஆமா ....உன்னாண்டதான் ஏமாத்தி பொயிக்கனும்ன்னு தலயெய்த்து பாரு...ஊரான் ஊட்டு பொருள திருடிக்கின்னு வந்துட்டு ஒயிங்காட்டும் பேசுது பாரு" கடைக்காரர் கோப துடன் கூறுவார்.

"வாணன்னா குடுத்துருன்னா.  நான் வேற கட பாத்துக்கறேன்"

ஒரு வழியாக அந்த கடையில் பதினைந்து ருபாய் கிடைக்கும் அல்லது வேறு கடையில் இருபது ரூபாய் கிடைக்கும்.  திருட்டுத்தொழிலில் உள்ள கடும் உழைப்பு மதிக்கப்படுவதே இல்லை என்று நான் கவலை கொள்வேன்.  எத்தனையோ ஆபத்துக்கள், தர்ம அடிகள், சமயத்தில் உயிர் கூட போய்விடும் வாய்ப்பு உண்டு.  கெட்டது என்று கூறப்பட்டாலும் இதிலும் ஒருசில நியாங்கள், தொழில் தர்மம் உண்டு.  "இல்லாத பட்டவங்ககிட்ட திருடக் கூடாது."  மேலும் ஊனமுற்றோர், எளியோர். ஏன் வள்ளல்தன்மை கொண்ட, கொடுக்கும் குணம் படைத்த பணக்காரர்களிடமும் கூட திருடக்கூடாது.  மாணிக்கம் விளக்குவான்.  அவன் அப்பா எம்ஜிஆர் உயிருடன் இருந்தபோது சிலசமயம் ராமாவரம் தோட்டத்தில் வேலைக்குப் போவார்.  அங்கு ஒருபோதும் அவர் திருட எண்ணியது கிடையாது.  ஏனென்றால் எம்ஜிஆர் கடவுள்.  மாபெரும் வள்ளல்.  உணவுதருபவர் வாரி வழங்குபவர்.   மாணிக்கத்தின் அப்பா எம்ஜிஆரின் பக்தர்.

ஆனால் மகாகஞ்சர்களிடம் நிறைய செல்வம் இருந்தும் ஒருவருக்கும் ஒன்றும் தந்துவிடலாகாது என்று வாழும் மூடர்களிடம் திருடுவது நியாயம்.  அப்படி திருடி கிடைக்கும் பொருளின் சுவையை விட அந்த அற்பர்கள் பறிகொடுத்து தவிக்கும் தவிப்பைக் காண்பது சுவையானது.  ஷேக்மானியம் அருகே தன் நிலத்தில் கீரை பறித்து ஏழு கிலோமீட்டர் நடந்து வந்து விற்கும் பாட்டியிடம், அவள் 50 காசு கேட்க "10 காசு வாங்கிக்கோ.  அதுக்கு மேல தர மாட்டேன்" என்று சொல்லும் அற்ப புத்தியுடைய எதிர்வீட்டு இன்ஜினியர் வீட்டு மாமி கோடைகாலத்தில் ஜன்னலை திறந்து வைத்து அதன் அருகே சோபாவில் சாய்ந்து கண்ணயர்ந்த ஒரு நேரத்தில் எவனோ கம்பிகளின் வழியாக கை விட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க சைனை பறித்துக் கொண்டு ஓடிவிட்டான்.  மாமி அழுது அரற்ற...தெருவைச் சேர்ந்தவர்கள் ஆளாளுக்கு துக்கம் விசாரிக்க எனக்கு மட்டும் மகிழ்ச்சியாக இருந்தது.  10 பைசா 20 பைசாவிற்கு ஒரு வயதான பெண்ணிடம் கருணை இன்றி நடக்கும் இவருக்கு இதெல்லாம் ஆவது நியாயம்.   "மாமி அந்த கண்ணனே திருடி இருக்கிறான்.  அவன் கடவுள் அல்லவா.  எல்லாம் அவனுடையது அல்லவா?" என்று எண்ணி சிரித்துக் கொண்டேன்.

எட்டாம் வகுப்பில் வேலிக்கம்பி திருடியதுடன் திருட்டை நிறுத்திக்கொண்டேன்.  "களவும் கற்று மற-ன்னு திருவள்ளுவரே சொல்லிகிறாப்ல.  கத்துகின்னாச்சி உட்டுறேன்" என்று மாணிக்கத்திடம் சாக்குபோக்கு சொல்லி அதிலிருந்து விலகினேன்.  நான் கற்றுக்கொண்டுவிட்டேன் என்பதை அவன் அங்கீகரிக்கவில்லை ஆனால் அதன்பின் அவன் என்னை திருடும் திட்டங்களுக்கு அழைக்கவில்லை.  ஏரியில் குளிக்க, சினிமாவிற்கு என்று மற்ற விஷயங்களுக்கு மட்டும் கூப்பிடுவான்.

பத்தாம் வகுப்பில் மாணிக்கம் திருட்டை நிரந்தரமாக கைவிட்டு திருத்திவிட்டான்.  காரணம் இதுதான்.  திருட்டுக்கலையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல புறநகரில் ஒரு சர்ச் பெல்லைத் திருட குறிவைத்து இருந்தான்.  அதை காய்லாங்கடைக்கு கொண்டு சென்றாலும் கூட செருப்படிதான் கிடைக்கும் என்றாலும் ஒரு பெரும் லட்சிய இலக்காக அதை குறித்திருந்தான்.  அக்ஸா பிளேடு, சுத்தியல், மற்றும் அந்த பெல்லை போகவர கவனித்து தேவைப்படும் என்று அவன் தயாரித்துக்கொண்ட சிலவற்றுடன் ஒரு நள்ளிரவில் காம்பவுண்ட் ஏறி மரத்தின் கிளையில் ஏறி சர்ச்சின் மீது ஏறி பெல்லை அகற்ற முயன்றிருக்கிறான்.

டங்....என்று பெல் ஒலிக்க சர்ச் மைதானத்தில் இடது கை முறிந்தவனாக அவன் கிடக்க ......மேலே இரு கரங்களையும் விரித்த ஏசுவின் சிலை "வா மகனே" என்று கருணையுடன் அழைக்க.  மாணிக்கம் திருந்திவிட்டான்.











No comments:

Post a Comment