Wednesday, June 12, 2019

ஒரு கும்பகர்ணனின் மங்கல் நினைவுகள்-5

கணக்கு ஆசிரியர் PR வெங்கடேசன் சாருக்கும் சமூகவியல் ஆசிரியர் மாதவனுக்கும் ஒரு ஒப்பந்தம் இருந்தது.  வகுப்பின் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த இருவரில் ஒருவரிடம் டியூசன் படிப்பவர்களாக இருந்தனர்.  மாதம் 50 ரூபாய் பீஸ்.  ஒருவர் மற்றவரிடம் தம் மாணவர்களின் பெயர்பட்டியலை அளிப்பார்கள்.  அவர்களை ஒருபோதும் பெயிலாக்கி விடக்கூடாது.  அத்துடன் மற்ற ஆசிரியர்களுக்கும் பெயர்பட்டியல் செல்லும் அவர்கள் விரும்பாவிட்டாலும் பகைத்துக்கொள்ள விரும்பாததால் உடன்பட்டனர்.

மாதவன்சார் வகுப்பில் சமூகவியலில் குடிமையியல் பகுதியை ஏதேனும் ஒரு மாணவனை எழுந்து படிக்கச்சொல்வார்.  அவன் இரண்டு நிமிடம் படித்ததும் நிறுத்தச் சொல்லிவிட்டு "குடிமையில்ன்னா ஜனம் எப்படி இருக்கனும்ன்னு சொல்றது .....பசிச்சதுன்னா நாம இன்னா பண்றோம் சோறு துன்றோம் ....வயிறு நிறைஞ்சதுன்னக்க போதும்ன்னு தோணுது ...ஆனா பணம் அப்படியா?  ஏதோ சம்பளம் குடுத்துன்க்கிறாங்கோ ...டியூசன் எடுத்தமின்னாக்க கொஞ்சம் கிடைக்குது ....50 ருவாக்கு மேல உன்னாண்ட கேக்க முடியுமா? முடியாது வட்டிக்கு காசு கொடுத்தமின்னாக்க ஓ**ன்னு பூட்ரானுங்கோ...கிருஷ்ணன் பத்தாயிரரூவா அமிக்கினு பூட்டான்" இப்படியே 40 நிமிடங்கள் பேசிவிட்டு வகுப்பு முடிய பெல் அடிக்குமுன் "அதுனால பாத்து சூதனமா பொயச்சிக்கடான்னு சொல்றதுதான் குடிமையியல் இங்கிலீஷ்ல சிவிஸ்க்ன்றானுங்கோ" என்பதாக முடிப்பார்.  வகுப்பின் நடுவே தன்னிடம் டியூஷன் படிக்கும் மாணவரில் எவரையேனும் ரேஷன் கடைக்கோ EB பில் காட்டவோ சிலசமயம் அனுப்புவார்.  மதியஉணவு இடைவேளை முடிந்துவரும் முதல்வகுப்பாக சமூகவியல் வந்தால் அது அதிர்ஷ்டம் ....அவரது புலம்பல்களை கேட்காமல் ஏதாவது உயரமான பையனின் பின்னால் அமர்ந்து உண்டமயக்கத்தில் உறங்கிவிடலாம்.

வெங்கடேசன் சாரிடமும் மாதவன் சாரிடமும் டியூஷன் படிக்காத மாணவர்கள் கடுமையாக முயன்றால் அவர்களது பாடங்களில் அதிகபட்சம் 65% மதிப்பெண்கள் பெறலாம்.  அவர்களிடம் டியூஷன் சென்றால் சமூகவியலில் 98%, கணக்கில் 100% வரை கிடைக்கப்பெறலாம்.  டியூஷன் மாணவர்கள் தேர்வுகளில் விடைத்தாளில் கேள்வி எண்களை மட்டுமே எழுதி வெறும்தாளை கொடுத்துவிட்டு பின்னர் சாரின் வீட்டில் வைத்து புத்தகம் பார்த்து எழுதிக்கொள்ளும் வசதி மாதவன்சார் மாணவர்களுக்கு உண்டு.  பின்னாளில் வெங்கடேசன் சார் மது பழக்கதிற்கு அடிமை ஆகிவிட்டார்.  அதிக விடுப்புகள் எடுத்தார்.  மாலையில் அல்லது இரவில் அவர் எங்காவது காரம்பாக்கம் சாலையில் அல்லது ஏரிக்கரையில் அல்லது மார்க்கெட் அருகே மட்டையாகி கிடந்தால் அவரை வீட்டிற்கு கொண்டு சேர்ப்பது அவரது மாணவர்களின் கடமையாயிற்று.  அவரது மனைவியின் உருக்கமான வேண்டுகோளின் பேரில் அதை எரிச்சலுடன் செய்துவந்தனர்.  அவரிடம் டியூஷன் படித்தவர்களில் ஒரிருவர் தவிர அனைவரும் விலகினர்.  மாதவன்சாருக்கு எண்ணிக்கை அதிகரித்தது.


பள்ளியில் இருந்து இரண்டு தெரு தள்ளி இருக்கும் டீக்கடையில் நாகூரும் நானும் நின்றோம்.  நாகூர் முதல்முறையாக சிகரெட் ஒன்றை வாங்கி பற்ற வைத்தான் அல்லது அவன் சிகரெட்அடிப்பதை நான் முதல்முறையாக காண்கிறேன்.  "இந்த வயசுலயே தம் அடிக்கற?" - பெரியவர்கள் தம் அடிப்பது நியாயம் என்பது என் எண்ணம்.  அவன் மூக்கின் வழியே புகைவிட்டான்.  "உள்ளே கனன்று கொண்டு இருக்கிறது அது மூக்கில் புகையாக வருகிறது" என்று சொல்லி சிரித்தான்.  டீக்கடை ரேடியோவில் பாடல் ஒலித்தது.

"வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம் தான்

சொல்லால் சொல்லாதது காதல் சுகம் சொல்லில் நில்லாதது
கண்ணால் உண்டானது கைகள் தொட இன்னாள் ஒன்றானது

வண்ணப்பூ வஞ்சிப்பூ வாய்வெடித்த வாசப்பூ
அன்புதேன் இன்பதேன் கொட்டுமா"

இளையராஜா பாடிக்கொண்டிருந்தார்.   "வண்ணப்பூ வஞ்சிப்பூ வாய்வெடித்த வாசப்பூ.....ஆம் அதுபோல புரட்சி வெடிக்கும் புதிய தேசம் மலரும்" என்றான் நாகூர்.  எனக்கு வியப்பாக இருந்தது.  எங்கிருந்து எங்கு தாவுகிறான்?  ஆனால் உவப்பாக இல்லை ஒரு மலர்மரத்தில் இருந்து மற்றொரு மலர் மரத்திற்குத்தான் தாவ வேண்டும் வறண்டு காய்ந்த பாறைகளின் பள்ளத்திற்கு தாவக்கூடாது.

No comments:

Post a Comment