அன்று PT கடைசி வகுப்பாக இருந்தது. பள்ளி மணியடித்து முடிந்து எல்லோரும் சென்றபின்னும் நாங்கள் மட்டும் விளையாடிக்கொண்டிருந்தோம். மாலை கதிரொளியில் சுருள்முடி திரிகளாக கதிரவனைத் தலையில் தாங்கி புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தின் மேல் நின்று மணலில் பாயத் தயாராகிக் கொண்டிருந்தான் மாணிக்கம். ஏழுகல் விளையாடி முடித்திருந்தோம். குச்சிகளை முறித்து வீசிக்கொண்டிருந்த தாமு மாணிக்கத்தைப் பார்த்துவிட்டு ஒரு குச்சியை எடுத்து அவனை நோக்கி வீச தயார் ஆனான். சுழன்று வரும் குச்சியைத் தவிர்க்க மணலுக்கு அப்பால் பாய முற்பட்டால் தரையில் விழுந்து கை-கால் முறியும். கிளம்பிய விசையை அப்படியே நிறுத்தி குதிக்காமல் நின்றால் நிலைகுலைந்து கட்டிடத்தின் விளிம்பில் இருந்து விழ நேரும். மாணிக்கம் மணலில் குதிக்கும்போதே குச்சியை எட்டி உதைத்து தாமுவை நோக்கித் திருப்பிவிட்டு மணலில் விழுந்தான். அதை தாமு தவிர்த்து விலகினான்.
"என்ன கும்பா...." என்னை நோக்கித் தலையாட்டி சிரித்தான் தாமு. நான் அவனுடன் பேச்சைத் தவிர்க்க விரும்பினேன். மாணிக்கம் மணலில் விழுந்து புரண்டு குட்டிக்கரணம் அடித்து தன் கரியமுகத்தின் வெண்பற்களை சூரியனுக்குக் காட்டி சிரித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று தோன்றியது. என்னைப் புரிந்துகொண்டது போல் பார்த்து திரும்பி மாணிக்கத்தை பார்த்து "மெண்டல்" என்றான். பிறகு "வரலாறு...." என அவன் துவங்க, "நீ சொல்றது சரியே இல்ல. ஒருத்தர் எங்க பிறக்கறாங்களோ அதுதான் அவங்க நாடு"
"எப்படி கும்பா. இப்ப நீங்க ஒரு வீட்ல பத்து வருசமா வாடகைக்கு இருக்கீங்கன்னு வைய்யி. அப்ப உங்க வீட்ல ஒரு குழந்த பொறக்குன்னு வைய்யி. அந்த குழந்த நான் பிறந்த இந்த வீடுதான் என் சொந்தவீடுன்னு சொன்ன அது சரியாயிருமா?" இதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை "அது வீடு ....இது நாடு" என்றேன்.
"எல்லாம் ஒன்னுதான் கும்பா"
"ஆன இப்ப அங்க வேற மக்கள் வாழறாங்க. அங்க எப்படி போக முடியும்? போனா அவங்க எப்படி சேர்த்துப்பாங்க?"
"ஏன் சேர்த்துக்க மாட்டாங்க? வரலாற்றுங்கறது உண்மை. இங்க பார் கும்பா உனக்கு ஒன்னுமே தெரியமாட்டேங்குது எல்லா நாடுகளுக்கும் பொதுவா ஐக்கிய நாடுகள் சபைன்னு ஒன்னு இருக்கு.... பன்னாட்டு நீதிமன்றம்ன்னு ஒன்னு இருக்கு அங்க இந்த வரலாற்று உண்மைகள ஆதரத்தோட குடுத்தா அந்த நீதிமன்றம் உத்தரவு போட்டுரும். அங்க இருக்கறவங்க அத கேட்டுத்தான் ஆகணும்."
எனக்கு அழுகை வரும்போல் தோன்றியது. இந்திய குடியுரிமை ரத்து ஆவதன் என் சோகத்தை அஸ்தமன சூரியனும் பகிர்ந்துகொள்கிறது என்று தோன்றியது. கலங்கிய கண்களுடன் ஏன் சொல்கிறேன் என்றே தெரியாமல் "குளிர்" என்றேன்.
தாமு சட்டென்று கருணை கொண்டு பரிவுடன் நோக்கினான், "அதுக்கென்ன கும்பா இத்தன நாள் நாம எப்படி பழகிருக்கோம்? அப்படியே உட்ருவமா ?" அவன் ஏதோ மாற்றுத் திட்டத்தை தெரிவிக்கப்போகிறான் என்று நினைத்தேன்.
"தேவையான அளவு கம்பளி போர்வை சுவிட்டர்ல்லாம் வாங்கிக் கொடுத்துதான அனுப்புவோம்"
அதுவரை மணலை காலால் உதைத்து பறக்கவிட்டுக் கொண்டிருந்த மாணிக்கம் வந்து சம்பந்தமே இல்லாமல் "ஏய் மண்ட காஞ்சிகினு கீது எதுக்குடா கம்பளி போர்வ சுவிட்டர் லூசுங்களா" என்றவன் என் முகத்தைப் பார்த்து சற்று யோசித்துவிட்டு "உங்க கொயம்புத்தூர்ல ரொம்ப குளிரா இருக்கும்றாங்களே அதுக்காண்டியா? தாமுவோட அப்பா கட்சிலகீறாரு ஊரு தலைவரு நல்லவரு....போன வருஷம் சின்னபோரூர்ல வீடுங்க உள்ளல்லாம் மழத்தண்ணி வரசொல ஜனத்த எல்லாம் இட்டாந்து நம்ம ஸ்கூல்ல தங்கவெச்சி சோறுபோட்டாரு ....போர்வைங்க வாங்கியாந்து கொடுத்தாரு" எனப் பேச தாமு பெருமிதத்துடன் சற்று நாணமும் அடைந்தான்.
"நீ இன்னாபண்னு இந்தமாரி கொயம்புத்தூர்ல ஏய பாயங்கல்லாம் குளிர்ல செத்துக்கினுகீறாங்கோ எதுனா பண்ணுங்கன்னு லெட்டர் எய்தி கையேத்து போட்டு தலைவராண்ட கொடுத்துரு"
நான் எரிச்சலடைந்தேன். தாமு சிரித்தான்.
No comments:
Post a Comment