துளசியின்
வாசம் அறையை நிறைத்திருந்தது. மேற்குப்பக்க சுவரில் லட்சுமன, பரத, சத்ருக்கனர் சூழ
அனுமன் அமர்ந்து கைதொழ ஸ்ரீ ராமர் சீதையுடன் நின்றிருந்த மாத காலண்டர் காற்றில்
மெலிதாக ஆடியது. சோபாவில் அமர்ந்து தலைகுனிந்து கையிலிருந்த ஆங்கில பாடபுத்தகத்தை வெறுமனே நோக்கிக்
கொண்டிருந்தேன். மாமா என் மீதுகொண்ட அவநம்பிகையின்
பேரில் எனக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெறுவேனா என்று
அல்ல தேர்ச்சியாவது பெறுவேனா என்று அவர் சந்தேகம் கொண்டிருந்தார். மாலை வேலைகளில் எங்கே என்று சொல்லமால் வெளியே சென்று
விடுவேன் அனைவரும் உறங்கி விட்ட இரவில்
பூட்டிய கேட்டில் சத்தம் எழாமல் ஏறி இறங்கி மெலிதான குரலில் "அம்மா"
என்பேன். அவள் மட்டும் உறங்கி இருக்க மாட்டாள்
என்பது எனக்குத் தெரியும். முதலில் அவள் எழுந்து வந்து கதவு திறந்து
கொண்டிருந்தாள். பின்னர் அது மாமாவிற்கு தெரிந்து
என்னை அவர் கடுமையாக பேசியதால் அவள் கதவு திறக்க எழுவதில்லை, பதிலாக கதவை வெறுமே
மூடி வைத்திருப்பாள். பிறகு மாலை
வெளியே சுற்றுவது தடைசெய்பட்டு கணக்கு மற்றும் ஆங்கிலத்திற்கு டியூஷன் செல்ல
ஏற்பாடு செய்யப்பட்டது. எங்கள்
தெருவிற்கு இரண்டு தெரு தள்ளி இதே ஊரின் வேறு ஒரு பகுதியில் இருந்து எங்கள்
பகுதிக்கு புதிதாக குடிவந்திருந்த ஆண்டாள் மாமி புகழ் பெற்ற தனியார்
ஆங்கிலப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவரிடம் தான் டியூசன். அவரது கணவர் ரங்கநாதன் LIC-ல் பணியாற்றி வந்தார்.
"கர்ணா
காபி சாப்பிடறயா ?" என்று மாமியின் குரல் கேட்டு திகைத்து கை புத்தகத்தை
மடித்துவிட்டு எதுவும் சொல்லாமல் விழித்தேன். மாமி சில கணங்கள் தாமதித்து விட்டு உள்ளே சென்று காபி
டம்ளர்-டப்பாராவுடன் வந்து "இந்தா" என்று நீட்ட பெற்றுக்கொண்டேன். அலுவலத்திலிருந்து திரும்பியவராக தோளில் பையுடன்
வீட்டினுள் நுழைந்த ரங்கநாதன் மாமா சோபாவில் உட்கார்ந்து காபி குடித்துக்
கொண்டிருந்த என்னைக் கண்டு புரியாமல் என் எதிர்புறம் நின்று புத்தகத்தைப்
புரட்டிக்கொண்டிருந்த மாமியைப் பார்த்தார். "டியூசன் வந்திருக்கான். பிள்ளையார் கோவில் பக்கத்திலே இவா வீடு இருக்கு...
பாவம் இவனோட அப்பா சரியில்லாததால கஷ்டப்படறா எக்ஸ்பாளையம் சொந்த ஊரு. இவனோட மாமாதான் இவனுக்கு டியூசன் சொல்லித்தரச் சொல்லி கேட்டார்" என்றாள்
மாமி. ரங்கநாதன் மாமா கேட்டு தலையாட்டி
விட்டு உள்ளே சென்று விட்டார்.
வெறுப்பில் இருந்த அன்றே என் பத்மப்பிரியாவை தரிசிக்கும்
பேறுபெற்றேன். மாமி "பாஸ்ட்
பர்பெக்ட் டென்ஸ்" என்று சொல்லிய அதே பர்பெக்ட் கணத்தில் "அம்மா..."
என்று சிரிப்புடன் அழகு தெய்வம் என தோன்றினாள். சோபாவில்
அமர்ந்திருந்த மாமியின் பின்னாலிருந்து கழுத்தில் கைகள் சுற்றி அணைத்து கன்னத்தோடு
கன்னம் இணைத்தாள் மாமி சிரித்துக்கொண்டே கைகள் விலக்கி எழுந்தாள்.
"எம் பொண்ணு" என்று என்னை நோக்கிக் கூறினாள். தெய்வம்
என்னை ஒரு கணமே என்னை பார்த்தது. என் பெயர் கும்பகர்ணன்
என்பதால் என் தலையில் கிரீடம் போல ஒரு கும்பம் எப்போதும் உண்டு என்ற கற்பனை எனக்கு
உண்டு. அழகின் கடவுளான அவளின் பார்வை தந்த அதிர்வில்
என் கும்பம் ஆடிக்கொண்டிருப்பது போல் தோன்றியது. தேவதை
அகன்று விட்டாள் ஆனால் கணங்களின் மின்னலில் கண்டது போல் அவள் கண்கள் சிரிப்பு பொன்னிறம்….அகலாமல்
நின்றது. அன்று இரவு தூங்காமல் "ம் அப்புறம்
...கூந்தல் ....காது ...கன்னம் ...தோடு உதடு ...தாடை ....என்று ஒவ்வொன்றாக மீண்டும்
மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டிருந்தேன். பேரழகு
என்பது மனநிறைவு அளிப்பது. அதற்கு இணையாக
இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை. அதற்கு இணையாக
முக்கியத்துவம் தரப்படவேண்டிய போற்றப்பட வேண்டிய வேறு விஷயங்களே இல்லை. ஆமாம். இதை
மறுப்பவர்கள் அறிவிலிகள்.
No comments:
Post a Comment