Tuesday, June 18, 2019

ஒரு கும்பகர்ணனின் மங்கல் நினைவுகள் - 4

நாகூர்கனி வகுப்பு மாற்றப்பட்டு எட்டாம் வகுப்பில் இணைந்தபோது அறிமுகம் ஆனான்.  நாகூரின் அப்பா கறிக்கடை வைத்திருந்தார்.  அத்துடன் ஊரின் பொதுவுடைமைக்கட்சியின் தோழர்களில் முக்கியமான ஒருவராகவும் இருந்தார்.  தாமுவின் அப்பாவிற்கும் நாகூரின் அப்பாவிற்கும் நட்பு இல்லையென்றாலும் ஒருவருக்கொருவர் அறிமுகமும் மரியாதையும் இருந்தது.  தாமுவைப் போலவே நாகூரும் தன் அப்பாவின் சித்தாந்தங்களால் தாக்கம் கொண்டிருந்தான்.  இரண்டு ஆண்டுகள் முன்பு நடந்த ஒரு சிறுவிஷயம் நாகூரின் அப்பாவிற்கு தாமுவின் அப்பாவின் மீது இருந்த மதிப்பைக் குறைத்துவிட்டது.  பொதுவுடைமைத் தோழர்களின் மிகவும் நேசத்துக்குரிய சோவியத்ரஷ்யா உடைந்து பல தேசங்களாக சிதறிவிட்டது.  தோழர்கள் மிகவும் துக்கத்துடன் இருந்தபோது இனஉணர்வை மையக் கொள்கையாக கொண்ட கட்சியைச் சேர்ந்த தாமுவின் அப்பா மிகவும் குதூகலித்தார்.  அவர் கட்சியின் நிலைப்பாடு வேறாக இருந்தாலும் தனிப்பட்டமுறையில் சந்தோஷம் அடைந்தார்.  தோழர்கள் தங்கள் கட்சி அலுவலகத்தின் முன்னால் அமைந்த செங்கொடி பறக்கும் கம்பத்தின் அருகே நின்று பேசிக்கொண்டிருக்க அந்த தெரு வழியே தன் ஜாவா பைக்கில் வந்த தாமுவின் அப்பா தோழர்களின் அருகே வண்டியை நிறுத்தி சிரித்தார்.  "கர்பத்த கலைச்ச மாரி கலைச்சான்ல்ல கர்ப்பச்சேவ் ....நல்லா அடிச்சான்ல்ல  ஆப்பு ... இனத்துரோகத்துக்கு கூலி...." என்று அவர் பேசத் தொடங்க நாகூரின் அப்பா கோபத்துடன் "என்ன இனத்துரோகம் செஞ்சோம்?" என்று உரத்தகுரலில் கேட்டு முன்னால் வந்தார்.  அவரது முறைப்பையும் கோபத்தைக் கண்ட தாமுவின் அப்பா தாழ்ந்த குரலில் "இன உணர்வு இல்லாம இருக்கிறதே துரோகம்தான்" என்று கூறிவிட்டு தன் வண்டியைக் கிளப்பி சென்றுவிட்டார்.  நாகூர் இதை என்னிடம் சொன்னபோது "அது கோர்பசேவ் தானே?" என்று கேட்டேன்.  "ஆமாம்.  ஆனால் அப்படி சொன்னால் "கர்" வராது.  அது அந்த கட்சிகாரர்களின் பழக்கம் எதுவென்றாலும் எதுகை-மோனையுடன் பேசுவது,  அய்யகோ வெந்ததே களம்..நொந்ததே உளம்.....கூட்டத்தில் பேசும்போது அனைவரும் ஒரேவிதமாக கரகர குரலில் பேசமுயல்வது, அதெல்லாம் அவர்கள் ஸ்டைல்.  ஓரளவுக்கு எங்கள் தோழர்களுக்கும் அதன் தாக்கம் உண்டு குறிப்பாக எங்களின் முரட்டுபிரி வு சார்ந்த தோழர்களுக்கு... 'குண்டி கழுவ தண்ணீர் இல்லை  கும்பகோணம் விழா ஒரு  கேடா?"  என்று விளக்கம் அளித்திருந்தான் நாகூர்.


நாகூருடன் அண்ணாசாலையில் உள்ள நியூசெஞ்சுரி புத்தகக் கடைசெல்வேன்.  அவன் எனக்கு நூல்கள் தேர்ந்தெடுத்துத் தருவான்.  கார்ல்மார்க்சின் வாழ்கை வரலாறு கூறும் ஒரு புத்தகம், இந்திய-சோவியத் உறவு குறித்த ஒன்று, மார்க்சிய நாத்திகம் என அவன் நூல்கள் எடுத்துத் தந்தான்.  நானாகவே தேர்வு செய்த சற்று தடித்த "அராஜகவாதமும் சிண்டிகலிஸ்டுகளும்" -அதை என்னால் வாசிக்கவே  முடியவில்லை தலையில் அடித்து வெளியே தள்ளிவிட்டது.  நாகூர் தந்தவை நான் வாசிக்க உகந்ததாக இருந்தது.  மார்க்சின் வரலாறு சுவாரஸ்யமாக கூறப்பட்டிருந்தது.  நான் கொஞ்சமாக லட்சியம் கொள்ளத்துவங்கினேன்.  பண்டைய எபிகூரஸின் நாத்திகம், பாயர்பாஹ், கதேயின் அங்கதம், மார்க்ஸ் ஏங்கெல்சின் நட்பு, கூரியகத்தி போன்ற  ஈவு இரக்கமற்ற தர்க்கம்.  ஆனால் முன்னதாக நாகூருடன் நட்பு துவங்கிய புதிதில் இவைற்றி சுத்தமாக எதுவுமே எனக்கு தெரியாது.  அவன் கோர்பசேவின் துரோகம் பற்றி கூறியபோது அதை தமாஷாகவே எதிர்கொண்டேன்.

"ஒரு பெரிய தொகை அமெரிக்காவிலேருந்து கோர்பசேவுக்கு போயிருக்கு"

"உனக்கு எப்படித் தெரியும்?"

"ஒரு தோழர் சொன்னார்"

"ஒருத்தன் காசு வாங்கிட்டு தன் நாட்டுக்கே துரோகம் செய்வானா என்ன?"

"ஏன் செய்யமாட்டான்? காசுக்காக எதுவேணா செய்யறவங்க செய்வாங்க"

அவன் விவரித்தான்.  கெடுபிடிமிக்க இந்துமாக்கடலையும் அட்லாண்டிக்கையும் தவிர்த்து அலாஸ்கா வழியாக சைபீரியா வந்து பின்னர் திரும்பி பசிபிக்கில் சிறிய கப்பல் மூலமாக விளாடிவோஸ்டாக் துறைமுகத்தை நெருங்கி ஆனால் அதற்குள் செல்லாமல் அதற்கு வடக்கே ஐம்பது மையில் தொலைவில் நங்கூரம் இட்டு....

"கோர்பசேவ் ஐம்பது மையில் நீந்துவாரா?"

"லூஸுமாறி கேக்கக் கூடாது.  ஒரு பெரிய நாட்டின் அதிபர்.  அவருக்கு தனிப்பட்ட ஆட்கள் இருப்பாங்க"

மொட்டைத் தலையுடன் கருப்புகோட் போட்டு கூலிங்கிளாஸ் அணிந்து மோட்டார்படகில் செல்லும் பழைய நடிகர் ஆர்எஸ் மனோகர்  என் மனக்கண்ணில் தோன்றி மறைந்தார்.

"ஏன் அமெரிக்கா சோவியத்தை உடைக்கணும் அதுனால அவங்களுக்கு என்ன ஆவப்போகுது?"

"ஏன்னா சோவியத்தும் அமெரிக்காவும் எதிரிங்க.  சோவியத் உழைக்கும் மக்களின் நாடு ...எல்லாருக்கும் வேலை கிடைக்கணும் எல்லாருக்கும் சோறு கிடைக்கணும்ன்னு நினைக்கிறவங்க.  அமெரிக்கா முதலாளிகளின் நாடு ஏகாதிபத்திய வெறி உள்ள நாடு ....ராக்பெல்லர் மாதிரி .ஒரு பத்து பதினஞ்சு பெரிய பணக்கார குடும்பங்கள் அந்த நாட்ட அவங்க கட்டுப்பாட்ல வெச்சிருக்காங்க.  கம்யூனிசம் உலகம் பூரா பரவி அவங்க நாட்டுக்கும் வந்துட்டா அவங்களுக்கு ஆபத்து அவங்க அதிகாரம் கையவிட்டு போய்டும்....."  நாகூர் விவரித்துக்கொண்திருந்தான்.  

ராக்பெல்லர் குடும்பத்தில் ஒரு அழகிய இளம்பெண் இருக்கிறாள்.  அவளும் நானும் காதலிக்கிறோம்.  முதலில் என்னை ஏற்றுக்கொள்ளாத ராக்பெல்லர் குடும்பம் என் வீரசாகசங்களாலும் புத்திசாலினத்தாலும் என்னை ஏற்றுக்கொள்கிறது.  அவளுக்கும் எனக்கும் திருமணம் முடிவாகிறது.  ராக்பெல்லர் குடும்பம் என் கட்டுப்பாட்டில் வருகிறது.  அங்கிருந்து என் தந்திரங்கள் மூலமாக அங்குள்ள எல்லா பணக்கார குடும்பங்களும் என் கட்டுப்பாட்டில் வருகின்றன.  அமெரிக்க அரசாங்கமே என்  கட்டுப்பாட்டில் வருகிறது.  நான் அமெரிக்காவை ஐம்பது சிறுதேசங்கலாக பிய்த்து எரிகிறேன்.  அடுத்த காட்சியில் முன்மாலை வெய்யிலில் விளாடிவோஸ்டாக் துறைமுகத்தில் ஒரு கப்பலின் மேல்தளத்தில் என் ரஷிய நண்பனை சந்திக்கிறேன்.  அவன் "கும்பகர்ணா………" என்று கைகளை விரித்து என்னை நோக்கி வேகமாக வருகிறான்.  ஆனந்தக் கண்ணீருடன் நாங்கள் தழுவிக்கொள்கிறோம்.  "இந்த நாள் நீ உன் டைரியில எழுதி வெச்சிக்கோ நீ எப்டி என் நண்பனோட நாட்டை இடிச்சியோ தனிதத்தனி நாடுகளா தவிக்கவிட்டு எங்கள கதற வெச்சியோ அதேமாரி உன் நாட்ட பீஸ் பீஸா கிழிச்சி உன் ஆணவத்த அழிச்சி உன் ஏகாதிபத்தியத்தை ஒழிச்சி உன்ன அலற வெக்கலேனா என் பேர் கர்ணா இல்லேடா ....இது அந்த கோயில் கோபுரத்து மேல இருக்கற கும்பாமேல சத்தியம்" என்று நான் போட்ட சபதம் நிறைவேறிவிட்டது.  ஆனால் அதை என் அமெரிக்க காதலி பார்த்துவிட்டாள் அவளுக்கு எல்லாம் தெரிந்து விட்டது.  அங்கு வந்து நிற்கும் அவளைப்பார்த்து நானும் என் ரஷ்ய நண்பனும் திகைக்கிறோம்.  அவள் என்னை கோபத்துடனும் கண்ணீருடனும் பார்த்து "உங்கள் கீழ்தரமான சதித் திட்டத்திற்கு புனிதமான காதல் தானா கிடைத்தது ? நீங்கள் என்னை காதலித்தது பொய்யா .....ஆங் ..?"  அவள் சிவாஜி கணேசன் போல பேசுகிறாள்.  நான் "இல்லை" என்று சரோஜாதேவி போல பலமுறை கூறவில்லை மாறாக "ஹும்" என்று பிஎஸ் வீரப்பா போல ஏளனமாக சிரிக்கிறேன்.  அவள் "என் தாய்நாட்டை சூறையாடிய உன்னை கொல்லாமல் விடமாட்டேன்" என்று ஆவேசத்துடன் துப்பாக்கியால் சுடுகிறாள்.  நானும் எனக்கு ரோஸ்கலர் பெயிண்ட் அடித்தது போலவே இருக்கும் என் ரஷ்யநண்பன் கும்பகர்ணேவ்ஸ்க்கியும் தப்புவதற்காக கடலில் குதிக்கிறோம். 

“படார்” என்று தோளில் அடித்து என் கற்பனையை கலைத்துவிட்டான் நாகூர்கனி.





No comments:

Post a Comment