”அவரப்
பத்தி நீ என்ன நினைக்கிறே?” பத்மபிரியாவின் கேள்வி ஒரு மெல்லிய நடுக்கத்தை கடந்துபோகச்
செய்தது.
”அவன்
நல்லவன் இல்லை”
”அவர்
நல்லவர்” - அவள் என்னைப் பார்காமலே தனக்குள் திளைப்பவளாக சொல்லி சிரித்தாள்.
”பை
கும்பா” அவள் சென்றபின்னும் நகரமுடியாமல் நின்றிருந்தேன். எதிரே சிமெண்ட் தண்ணீர்த் தொட்டியை தென்னை மரம்
தன் மட்டை ஒன்றால் தொட்டுப் பார்த்துவிட்டு நகர்ந்தது. கதிர் மறைந்து விண்மீன்கள் எழந்தன. மொட்டை மாடியின் தரையில் மல்லாக்கப்படுத்தேன். வெப்பம் முதுகை வறுத்தது வாணலியில் வறுக்கப்படும்
கடலையின் நினைவு வந்தது. அல்ல சுடுகாட்டில்
எரியும் பிணம். ”எரிந்து சாம்பலாகிவிடு” கண்களில் ஈரம் பெருகி விண்மீன்கள் குழப்பமடைந்து
நடுங்கத் தொடங்கின.
உண்மையிலேயே
இதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் “உன்னிடம்
பேச வேண்டும்“ என்று அழைத்தபின் நான் சென்ற தொலைவு….அத்தனையும் போனது விண்மீன்களிடையே
சிரித்து பறந்து ஒர் உதையில் மொட்டைமாடியில் விழுந்து வெந்து கருகுகிறேன்.
வந்த
புதிதில் அந்த சினிமா டான்ஸ் மாஸ்டர் மாலை வேளைகளில் சத்தமான இசையுடன் தன் குழுவினருடன்
தான் ஆடிக்கொண்டிருந்தான். அவனது பிளாட்டில்
இருந்து வரும் சத்தம் மொத்தமாக நான்கு பகுதிகள் கொண்ட அந்த கட்டிடத்தை அதிரச்செய்ததுடன்
தெருவைக் கடந்து எதிர்பக்கம் எங்கள் வீட்டு வாசலையும் கடந்தது. எதனாலோ அந்த பிளாட்டில் அத்தனை பேரும் அது முடியும்
வரை சகித்துக் கொண்டனர். மாமா மட்டும் அவ்வப்போது
அவனுக்கு நல்ல சாவு வராது என தன் விருப்பதைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்.
பிறகு
அக்கம்பக்கத்து சிறுவர் சிறுமியருக்கு நடனம் கற்பிக்கத் தொடங்கினான். நானும் பத்மப்பிரியாவும் நடனம் கற்க நட்புடன் அவனால்
அழைக்கப்பட்டு சென்ற முதல்நாளே நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டேன் வலது கையை அலை போல அலைக்க வேண்டும். ”இல்லை.
நீ செய்றது வா வான்னு கூப்பட்ற மாறி இருக்கு.” ”உனக்கு வாராது அப்புறம் ட்ரை பண்ணலாம்.” ஒரேடியாக நிராகரித்து விட்டான். பத்மப்பிரியாவுக்காக அங்கேயே காத்திருந்தேன். மற்ற மாணவர்கள் சென்ற பின்னும் அவளுக்கு மட்டும்
வகுப்பு நீண்டது. தொட்டு, வளைத்து, பின்னாலிருந்து
தோளில் மேல் முகம் நுழைத்து இருகரங்கள் இறுகப்பற்றி. இவளுக்கு மட்டும் ஒரே நாளில் தானறிந்த எல்லாவற்றையும்
கற்பித்து விடுவான் போல.
”பிரியா
நாம போலாம் நேரமாகுது”
”நீ
போ கும்பா. நான் போய்க்கறேன்”
”யெஸ்
அய் வில் டிராப் ஹர் டோன்ட் ஒரி கும்பா”
பிறகு
நான் நடன வகுப்பிற்கு செல்லவில்லை. மாமியிடம்
டியுஷன் மட்டும் சென்றுகொண்டிருந்தேன். பத்மப்பிரியா
என்னை கண்டுகொள்வதில்லை.
No comments:
Post a Comment